நாம் வந்துவிட்டோமா அந்த உலகிற்கு?
ஒரு வயதிற்குள்ளேயே
பேயறைபட்ட முகங்களாகிவிட்ட
குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும்
அச்சம் கொண்ட பெண் விழிகளை
மான் விழிகள் எனவும் –
கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும்
நம் அழகியல்பற்றி
நாம் யோசித்திருக்கிறோமா?
இரண்டுபட்டுக் கிடக்கும்
எல்லாவற்றாலும்
பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும்
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவே
தராசுமுள் நுனிக்கூடா மய்யத்தின் –
பூஜ்யத்தின் –
பேருலகினின்றும் பிறக்கும் செயல்கள்
தானில்லாமல் தானாகவே
அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றனவா
இவ்வுலகில்,
இயற்கையான ஒத்துழைப்பு எனும்
சின்னஞ்சிறு முயற்சிகளை மட்டுமே பற்றிக்கொண்டு?
எல்லாத் தடைகளையும்
வீணாற்றல்களாகும் குப்பைகளையும்
கண்டு தாண்டி
நாம் வந்துவிட்டோமா, இந்த உலகிற்கு?