சிற்றெறும்பு
வாசிக்க விரித்த பக்கத்தில்
ஒரு சிற்றெறும்பு விரைவது கண்டு
தாமதித்தேன்.
புதிது இல்லை அக்காட்சி,
ஒவ்வொரு முறையும் தவறாமல்
என் நெஞ்சை நெகிழச் செய்யும் அக்காட்சி
அதன் உடல் நோகாத மென்காற்றால்
ஊதி அகற்றிவிட்டு
வாசிப்பைத் தொடரும்
என் வழக்கத்திற்கு மாறாய்
இன்று வெகுநேரம்
அதனையே பார்த்திருந்தேன்
விளிம்பு தாண்டி மறைந்தும்
மீண்டும் சில வினாடிக்குள் தென்பட்டுமாய்
காகிதத்தின் விசித்திரமான கருப்புவெள்ளைப் பரப்பூடே
எத்தனை சுறுசுறுப்பாய் இயங்குகிறது அது
எதைத் தேடி
அது இந்தப் புத்தகப் பாலையூடே
வந்து அலைகிறது?
மூடத்தனமான என் கைகளின் இயக்கத்தால்
மடிந்துவிடாத பேறு பெற்றதுவாய்
இன்னும் உயிரோடிருக்கும் ஒரு பேரின்பமோ?
ஊன் பசிக்கு மேலாய்
நம்மை உந்திச் செல்லும்
பேருந்தலொன்றின் சிற்றுருவோ?