பன்னீர் மரக் கன்று
நான் தேடிய நல்ல உயரமான
ஒரு பன்னீர்க் கன்றை
தான் வைத்திருப்பதாயும்
தரக்கூடியதாயும் சொன்ன
எனது மாணவச் சிறுவனின்
வீட்டையும் அந்தக் கன்றையும்
நேரில் சென்று பார்த்துவைத்தாயிற்று
அவனிடமிருந்து அதனைப் பக்குவமாய்ப் பெயர்த்துவர
இந்த வெங்கோடைப் புவிப்பரப்பில்
ஒரு விடிகாலை அல்லது அந்திதானே
உத்தமமான நேரம்?
தன் மலர்மரக் கன்றோடு
முடிவற்ற பொறுமையுடன்
எனக்காக அந்தச் சிறுவன் காத்திருக்க,
ஒவ்வொரு நாளும் மடிமிகுந்து விடிகாலையையும்
அலுப்புமிகுந்து அந்தியையும்
நெடிய மறதியினாலும் தூக்கத்தினாலும்
அநியாயமாய்த் தவறவிடுகிறேன்
காத்திருப்போ கவலைகளோ அற்ற பொன்னுலகில் இருந்தபடி
பூத்துச் சொரிந்துகொண்டு
நீ கொலுவீற்றிருக்கிறதைக் கண்ணுற்றவேளைதான்
உன் மர்மமான புன்னகை ஒன்று காட்டிக்கொடுத்துவிட்டது;
எங்களுக்கு மாயமான கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தது
யார் என்பதை