வாசனை
மரங்களின் மடியில்போய் அமர்ந்திருந்தது என் வீடு
இந்தக் குளிர்காலக் காலையின்
நகர்ந்துகொண்டிருக்கும் குளிரை
எனக்காக சற்று பிடித்து வைத்திருந்தன மரங்கள்
இதோ வந்துவிட்டேன் என
அதை எட்டிப்பிடிப்பதுபோல்
என் பாதங்கள் ஒலித்து விரைந்தன
மாடிப்படிக்கட்டுகள் மேல்
செவ்வகமானது இந்த மொட்டைமாடி எனினும்
இன்னும் சில தலைமுறைகளையும்
மேலும் சில அறைகளையும் தாங்க
பூமியில் நன்றாய் அஸ்திவாரமிடப்பட்டது எனினும்
எல்லையற்ற வான்வெளி கண்டு
தன்னைத் துறந்துநிற்கும் பேறு கொண்டதுமாகும்
அந்த ஓய்வுநாளில்
மரநிழல் கனிந்த மொட்டைமாடியின்
ஏகாந்தம் – ஒரு பிரபஞ்ச கானம்
நாசிநுனியை பற்பலவிதமான சுகந்தங்களாய்
வருடக்கூடியது அந்த கானம்
இங்கிருந்து என்னைக் கீழே இழுத்துப் போடும்
மனைவியின் குரல் கேட்காது இன்று
(எல்லாம் வாங்கிப் போட்டுவிட்டேன்
ஒரு மாதத்திற்கு கவலையில்லை)
ஒரு தகராறுக்குச் சாட்சியாக
போலீஸ் அழைத்துக்கொண்டிருந்த
தொந்தரவும் ஒருவாறு முடிவு பெற்றுவிட்டது
கவலைகளைப் போலவே
இந்த நிம்மதிகளும் தொலைந்து
அமர்ந்திருக்கிறேன்
மரங்களிடையே திடீரென்று ஒரு பெரும் சலனம்,
மிகுந்த வேதனையுடன் அடிவயிற்றை இறுக்கியபடி
ஆலகால விஷமொன்றை வாரி விழுங்குவதுபோல
நாசிநுனியில் ஒரு துர்கந்தம்
கீழே சுற்றுப்புறத்தில்
ஒரு தொழிற்சாலையின் கழிவுத்தேக்கம்
என் சுவர்களுக்குள் பூக்கள்
(ஒவ்வொரு பூவின் உறுப்புக்கு நலம் தருவதாகும் எனும்
விபரப்பட்டியல் உண்டு என் மனைவியிடம்)
”இந்த வாசனையை இழுத்து முகருங்கள்
உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது இது” என்றபடி
என் நாசி நோக்கி நீண்ட அவள் விரல்களில்
இரத்தச் சிவப்பான ஒரு ரோஜா
என் உயிர் உறிஞ்சப்பட்ட வாசனை
என்னுள் நிறைந்து
என் வியர்வைத் துவாரங்களெங்கும் கமழ்ந்தது
ஆரத் தழுவி நின்றேன் என்னை நானே