தனிமை
என் தனிமையைப் போக்கும்
ஒரு மணற்குன்று: விழிமூடிய இமைப் பரப்பு.
நான் போய் அமர்ந்திருந்தேன்:
இமைப்பரப்பைக் குனிந்து
முத்தமிடும் இதழ்வேளை
முத்தமிட்டதை முத்தமிட்டது விலகி நின்று பார்க்கையில்
மெல்ல இமை தூக்கிற்று
ஒரு சுரங்கக் கதவைப்போல் அந்த விழி
உள்ளே: ஒரு மலைப் பிரதேசத்தின்
கிடுகிடு பள்ளத்தாக்கின் அடியில் ஓர் ஓடை
அந்த ஓடையினின்று
என்னை ஈர்க்கும் ஒரு வாசனை
சரிந்து உருண்டு விழுந்துவிடாதபடி
அதீதமான ஓர் ஆர்வம் உந்த
நுண்ணுணர்வு துலங்க வெகு பத்திரமாக
கிடுகிடுவென வந்து சேர்ந்துவிட்டேன்
வந்து சேர்ந்த பின்னும்
குளிராய் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு தயக்கம் –
இன்னும் நான் கடக்க வேண்டிய தூரமாயிற்று
எங்கே அந்த வழி?
மூக்கு நுனியால் சோதித்து நிச்சயித்துக்கொண்டு
காட்டின் ஒளி நிழலை மீட்டியபடி
தேக்குமரச் சருகுகள் அதை உச்சரிக்க
தனது இரையை நோக்கி
தனது இயல்பான பசியின் கம்பீரம் துலங்க
நெருங்கிக்கொண்டிருந்தது ஒரு புலி
ஓடையின் பளிங்கு நீரில் அதன் முகத்தைக்
கண்ட மாத்திரத்தில்
அலறி அடித்துக் கிடுகிடுவென ஏறி
ஓட்டமாய் ஓடித் தப்பி
வெகுதூரம் வந்து திரும்பிப் பார்த்தேன்:
தூரத்தே நின்று என்னை அழைத்து
என் தனிமையைப் போக்கிய ஒரு மணற்குன்று
விழி மூடிய அந்த இமைப்பரப்பு