ஒற்றை மரம்
ஒரு மேற்கத்திய இசை நடத்துநனைப் போல்
உணர்ச்சியுடன் கைகளை அசைத்து அசைத்து
உருகிக்கொண்டிருந்தது தனித்த வேப்பமரம் ஒன்று
வாத்ய கோஷ்டி ஏதும் எதிரே இல்லை!
வியர்த்தம் வியர்த்தம் எனக் கரைந்தது
அதன் கிளைகளூடே ஒரு காகம்
ஆச்சர்யத்துடன் அந்த மரத்தை நெருங்கினேன்
அது எழுப்ப விரும்பும் இசையைக்
கேட்க விரும்பியவன் போல் –
தன்னுள்ளே ஏராளமான வாத்யங்களுடன்
தானே இசைத்துக்கொண்டுமிருந்தது அது!
அந்த இசையைத்தான்
இன்னும் என் செவிகள் எட்டவில்லை
காரணம்?
புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர்!
ஆயினும் என் மனம் குதூகலித்தது
நான் கேளாத அந்த இசைக்கு
அந்த மரத்தின் உறுப்புக்கள் அனைத்தும்
நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு
திடீரென்று ஓர் அமைதி,
அந்தக் கண்ணாடிச் சுவரின் தொடுகை
அதை உடைத்துக்கொண்டு ஒரு வெள்ளம்
என் செவியையே மூழ்கடித்து
அடித்துச் சென்றுவிட்ட இசைவெள்ளம்