எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்க வாசகனுக்கு
ஒரு கவிதை எழுதப்படுவதற்கு முன்னும் பின்னும்
நான் எவ்வாறு இருக்கிறேன் தெரியுமா?
இருண்ட கானகத்துள் தொலைந்து போனவன்
அடுத்த அடியை வைக்கும் பாதம் தொடுவது
பெரும் முள்பரப்பா, ஆழ் சகதியா, பள்ளமா தெரியாது
எனது வழியற்ற வழியில் நான் கண்டவர்கள்
குறிக்கோளையும் பாதைகளையும் மிகத் தெளிவாய் அறிந்த
தீர்க்க நடையினர்
நானோ சென்றடைய வேண்டிய இடத்தின்
திக்கோ அடையாளமோ தெரியாதவன்
வழிகாட்டப்படக்கூடும் வாய்ப்பினை இழந்தவன்
பீதியுற்ற குழந்தையாய்
நான் அரண்டு நின்றதும் வெகு நேரம் இல்லை.
கதறி அழுவதையும் விட்டுவிட்டேன். அதன் எதிரொலியாய்
கானகமே அழுவதைக் கண்டு
பிறிதோர் மேன்மைப் பயத்திற்கு ஆட்பட்டு
இப்போது நான் அடிக்கும் சீட்டியொலியும், குரல் தூக்கலும்
பாடல் அல்ல; பயத்தின் பேய்விரட்டல்
அதோ அந்த விண்மீன்களிடமிருந்தா?
இந்தக் குன்றிடமிருந்தா?
இந்த மரங்களிடமிருந்துதானா?
ஏதோ ஒரு மௌனமான
பொறுமைப் பார்வையினின்று வந்த காற்றில்
ஓர் அற்புதம் போல் முகிழ்ந்த ஒரு மலரால்
இக் கானகச் சூழல் எனக்கு அன்யோன்யப்படும்
அந்தக் கணம், எல்லாமே மாறிவிடும்
நானும் புதியதாய்
ஒரு கவிதையை எழுத அல்லது வாழத் தொடங்கியிருப்பேன்
- சின்னஞ் சிறிய சோகம் (1992) கவிதைத் தொகுப்பிலிருந்து