இனி இவள் உன்னுடையவள்
உள்ளங்கைக் குழிவிலிருந்து
இறக்கிவிடு இறக்கிவிடு எனத்
துடிதுடித்தன விதைகள்
நாற்றங்காலில் வளர்ந்தபடி
வீதி வீதி வீதி என அரற்றல்
வீதிக்கு அழைத்து வந்தேன்
விலங்குகள் விலங்குகள் என நடுக்கம்
வேலிக்கெனச் செலவழிக்க இயலாத ஏழை நான்
முள் விளாறுகளை வெட்டி வேலியமைக்கிறேன்
காய்ந்த முள் விளாறுகளை அடுப்பெரிக்க
பிடுங்கிச் செல்லும் ஏழைகள்…
அவர்களை என்ன செய்ய?
நான்தான் என் வழிமுறையை மாற்றிக்கொண்டேன்
விலங்குகள்.. முன்னங்கால்கள் தூக்கி
எக்கி எழுந்து வாய் நீட்டும்
அவற்றின் வாய்க்கு அகப்படாத உயரம்வரை
என் வீட்டிலேயே வளர்க்கிறேன் இவளை
அன்பானவனே!
இப்போது
இடுப்பிற்கு மட்டும் சிறியதாய்
ஒரு முள் ஆடையை அணிவித்திருக்கிறேன்.
பூமி குளிர மழைக்கும் உன் கரங்களில்
இவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டேன்.
இதுவரை இவள் என் மகளாக வளர்ந்தாள்
இனி இவள் உன்னுடையவள்