கனியின்…
கனியின்
பூ மலரும்
ஒரு கணத்தையும்
கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ
இந்த உலகில்?
காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில்
பூக்கவே பூக்காத ஒரு மலர்
பார்வை மின்னலில் அறுந்துவிழும் சங்கிலியால்
கண்டடைந்த பொன்வெளிதானோ
கனியும் மலரும்?
Poet Devadevan
கனியின்
பூ மலரும்
ஒரு கணத்தையும்
கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ
இந்த உலகில்?
காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில்
பூக்கவே பூக்காத ஒரு மலர்
பார்வை மின்னலில் அறுந்துவிழும் சங்கிலியால்
கண்டடைந்த பொன்வெளிதானோ
கனியும் மலரும்?
என்ன பிழை இது?
இனி எப்போதும்
கவனமாக இருக்க வேண்டும் என்பதை
உணர்த்திக்கொண்டே இருக்கிறது
கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க
எடுக்கப்பட்டுவிட்ட புகைப்படம்?
துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.
அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி
இத்துணை உக்கிரமாய்
அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்?
நிலைகுலைய வைக்கவில்லையா
செயல்களனைத்தையும் சாதிக்கக்கூடிய
எத்துணை பெரிய அற்புத இசையையும்
சுத்தமாகத் தகர்த்துவிடும்
பின்னால் ஓடத் துவங்கும் நம் சிந்தனைகள்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
ஆழமற்றதும் ஆபத்தானதும்
தந்திரங்களாலானதுமான
பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு
என்பவற்றால்
அன்பு எனும் பெயராலே
காலம் காலமாக
நம்மையும் உலகையும்
ஏமாற்றிக் கொண்டேயிருப்பவர்கள்தாமே, நாம்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
புண்பட்ட கோணல் மனிதர்களால்
உருவானதல்லவா
போரும் குழப்பமும் வலிகளுமான
இந்த உலகம்?
ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மனிதனைக்கூட காண முடியவில்லை
என்ற மனிதன்
தனக்குள்ளாவது
ஒரு மரத்தையோ மனிதனையோ
கண்டிருக்க மாட்டானா?
தன் துயர் என்பதே இல்லாதிருந்ததால்தானே
அன்புடையவனாயிருந்தான் அவன்?
தன் துயர் அல்ல
துயர்மலி உலகின்
பெருந்துயர்தானே
பரிவு என்றும் பேரன்பு என்றும்
அவனிடம் இருந்தது?
நான் நான் நான் எனும்
நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே
போர்களும் குழப்பங்களும் வலிகளும்?
இந்த உலகத் துயரங்களே
நம்முடைய துயரங்கள் எனும்
மானுடத் துயரங்களாகும்போதுதானே
பிறக்கின்றன
அன்பு, பரிவு, பேரன்பு, கடவுளின் ராஜ்ஜியம்
என்பதெல்லாம்?
நம்முடைய துயருக்கும்
மானுடத் துயருக்குமிடையே
மின்னற் பொழுதுதானே தூரம்?
அனைத்து வாழ்வுகளும் மகத்தானவை. அதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருந்தால் போதும்
அறியாமை மற்றும்
அறிய முடியாமையையும்
அறிதல்தானே
அறிகிறது?
அறிவாகி
தன்பெயரையே கெடுக்கிறதையும்
அனைத்து துயர்களுக்கும்
பெருந் தீமைகளுக்கும்
காரணமாகிவிடுகிறதையும்
அவன் (அறிவு) வேறு
இவன் (அறிதல்) வேறு என்பதையும்
அறிதல் தானே அறிகிறது?
எவ்வளவுதான் பெரியவனானாலும்
அவனை, தனக்குரிய இடத்தை விட்டு
எங்கும் நகராதபடி கட்டிப்போட்டுவிட்டு
அவனோடு நாம் எவ்வளவு எச்சரிக்கையோடு
இருக்க வேண்டும் என்பதை
அறிதல்தானே சுட்டுகிறது?
நம்பிக்கை, நம்பிக்கையின்மை
இரண்டுமே அறிவாகி
முடமாகி விட்டிருக்கிற உலகில்
அறிதல்தானே எதுவாகவும் மாறாத
ஆற்றலாக இருக்கிறது?
அனைத்து துயர் இருளையும்
விரட்டியடித்துவிடத்தக்க
ஒளியாக இருக்கிறது?
அறிதல்தானே
பார்க்கவும் கேட்கவும் கவனிக்கவும் சொல்கிற
வழிகாட்டியாக இருக்கிறது?
மனிதனல்ல,
எந்த மனிதனுமில்லாத
ஆளுமைப் பண்புகள் என்றேதுமில்லாத
அறிதல்தானே மகாஞானியாக-
பேராளுமையாக இருக்கிறது?
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
நிறுவ வேண்டுமல்லவா?
”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம்
கவிதைதான்” என்றபடி போஸ் கொடுக்க
ஒரு கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தினோம்.
“கடை விரித்தோம், கொள்வாரில்லை”
என்று சொல்ல
நாம் ஒன்றும் பழைய வள்ளலாரில்லையே
பார்த்துவிடலாம் ஒரு கை!
காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?
அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?
மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?
மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?
நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?
மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP