Tuesday, May 31, 2011

காத்திருக்கும் இரவின்…

காத்திருக்கும் இரவின்
கட்டிலில் சாய்ந்தவுடன்தான்
எத்தனை நிம்மதி!
இது போலுமொரு நிம்மதியுடன்தான்
மரணமும் நிகழும்
எனும் ஓர் ஆறுதல் குறிப்பும்
அதில் உளதோ?

Monday, May 30, 2011

நிலக் காட்சி

மிகப் பெரியதோர் இலட்சிய நன்மையே
பிரம்மாண்டமான மெய்மையும்
காதற் பெரும் இருப்பும்
இப் பேரியற்கையின் எழிலுமாமோ?

உரையாடல்களில் புகுந்து
கண்களில் நீர் துளிர்க்க
உடல்கள் தத்தளிக்கச் சிரிக்க வைப்பதும்
முடிவிலாத
இலட்சிய பூர்த்தியொன்றின்
கொண்டாட்டம்தானோ?

இரவோடு இரவாய்
ஊர் வந்து தூங்கி விழித்தபோது
பட்டென்று இழையறுந்த அசம்பாவிதம்போல்
எட்டி விலகி நின்றது
ஏமாற்றமான ஒரு விடியல்.

எனினும் அப்போதும் அவனைச் சுற்றிக்
குன்றாத அழகு நிலக் காட்சி.
சற்றே விலகித் தகிக்கப் பார்க்கும் வெளி.
எனினும் திடீர் திடீரென்று வரும்
கற்றை மென்காற்றலைத் தீண்டலில்
மீக்குளிரும் கம்பளியும் போலும்
காதற் பெரும் இருப்பின்
ஆவி தொட்டளாவிய நெருக்கமும் தழுவலும்.

Sunday, May 29, 2011

காதலின்ப முழுமை

காதலின்ப முழுமை
நிலவுமோடா,
இப்புவியில்,
உன் காதலியிடம்
உன் குற்றம் வருந்தி
உன்னை
நீ திருத்திக் கொள்ளாவிடில்?

Saturday, May 28, 2011

மண்ணும் மனிதர்களும்

மண்ணைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய்
நாம் வாழ்ந்த்தெப்போ?

எளிய வீடுகளின் மத்தியிலே
வளர்ந்து வளர்ந்து
காவல் நாயும் இரும்புக் கதவும்
ஓங்கு மதிற் சுவர்களுமாய்
நாம் மாறியபோதோ-
வலியறியாதவர்களாயும் ஆனோம்?

இந்நிலையிலும்
நம் குழந்தைகளுக்கு நம் இல்லங்கள்
கதகதப்பான கருமுட்டைச் சுவர்களாய்க்
கசிந்து உற்றதெப்படி?

கூட்டை உடைத்துக்கொண்டு
கண்டம் விட்டுக் கண்டம் போய்ப்
படிக்கவும் வாழவும்
அவர்களை உந்தும்
ஆற்றலும் நிகழ்களமும்தான் யாவை?

இன்றின் பெருமழைகளிலும்
புயல்களிலும்
ஆழிப் பேரலைகளிலும்
நில நடுக்கங்களிலும்
ஒலிக்கும் இவ் வேதனையின்
பொருள்தான் என்ன?

Friday, May 27, 2011

அந்த முகம்

லட்சுமி லட்சுமி என்று
ஒரு சிறுமி இருந்தாள்.
அவள் தன் தம்பிப் பாப்பாவை
பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை
உரிய வயதில் பள்ளிக்கூடம்
காணாது போக்கிற்று.
காலங் கடந்து சென்று படித்த படிப்பும்
அம்மாவுடன் வேலை செய்ய வேண்டி
பாதியில் முடிந்தது. அப்புறம்
வெளியே போயும் வேலை செய்து
தன் முதுகொடித்துக் கொண்டாள்.

கல்யாணமாவதற்குத்தான்
என்ன பாடு பட்டு விட்டார்கள்
அவள் பெற்றோர்
ஆனால் கல்யாணமாகியும்
அவளுக்கு ஒரு வாழ்க்கை
அமையாது போனதுதான் என்ன கொடுமை.
மாமியாரும் நாத்தனாரும் கொழுந்தனாரும்
அவளைக் கூறுபோட
ஓய்வில்லா வேலைகளையும் அவமானங்களையும்
கேட்கவோ பகிர்ந்துகொள்ளவோ
இரவிலும்
அவள் கணவனுக்கு
ஒழியவே இல்லை நேரம்
அவனும் அமைதியில்லாமல்
அவள்மீதே எரிந்துவிழுந்து கொண்டிருந்தான்
எல்லாவற்றுக்கும்.

கல்யாணத்திற்கு முன்பிருந்த
ஒரு சின்னக் கனவுக்கும் கூட
வழியற்றுப் போன வாழ்க்கை எனினும்
ஒருநாள் திடீரெனக் காதல் தேவதை
அவள் மீது இரங்கி ஒரு பரிசளித்தது.

நோயில் படுத்த லட்சுமி
எழுந்திருக்கவேயில்லை.
அவள் படுக்கையைச் சுற்றிச் சுற்றி
நோயாளிப் பெண்ணை
ஏமாற்றிக் கட்டிக் கொடுத்துவிட்டதாய்-
(பரிசு ரகசியம் அவர்களுக்கென்ன தெரியும்?)
அவள் பெற்றோரை வசைபாடிக் கொண்டிருந்த
கணவன் குடும்பத்தையும் விட்டு
தப்பிச் சென்று விட்டாள் அவள்.
குழிக்குள் பிடிமண் அள்ளிப்போடக்
குனிந்த வேளை
நான் அதிர்ந்து போனேன்
பொழுது பூத்த தாமரைமலராய்
அப்படியொரு நிறைவும் அமைதியும் ஒளிர்ந்த முகத்தை
முதன்முதலாய்
காணப்பெற்றவனாய்.

துயரங்களினின்றும்
மானுடம் விடுதலை பெறுவதற்கான
ஞானத்தை அடையத் தடையாயிருப்பது
துயரங்கள்தாம்
என உரைத்துக்கொண்டிருந்த்து
அந்த முகம்.

Thursday, May 26, 2011

புதிய பேருந்து நிலையம்

ஒளியும் காற்றும்
வெள்ளமாய்ப் பொங்கிநிற்கும்
பேருந்து நிலையம் வந்து நின்றார்
புத்தர்.

வெளியினின்றும் வெளியினைப் பிரிக்கும்
பக்கச் சுவர்களில்லாத
தியான மண்டபம்
சுரணையை மழுங்கடிக்காததும்
போர் வித்துக்களை விதைக்காததும்
வாழ்வைக் கொள்ளையடிக்காததும்
வாழ்வை விட்டுத் தள்ளிநின்று
வாழ்வைக் கொன்றழிக்காததுமான
கோயில்.

‘வானமும் பூமியும்’ எனும் சிற்பம்
பிரக்ஞையை அழிக்காததும்
சொற்களால் மெய்மையைச்
சிதறடிக்காததும்
வெறும் பொழுதுபோக்காகி விடாததுமான
உன்னதக் கலைக் கட்டடம்.

பிரக்ஞையற்றும் சுரணையற்றும்
வந்தும் நின்றும் போயும்
கொண்டிருக்கும் மனிதர்கள்
நீங்காது நிற்கும் துயரங்கள்.

Wednesday, May 25, 2011

பிழை

ஒரு பெரும் பிழை
நிகழ்ந்து விட்டது போலிருந்தது.

மாபெரும் விழாக்
கூட்டத்தின் மையமாய்
கடவுள் சிலை.
கூடியிருந்த
மானுடரனைவரையும் நச்சி
அவர் தம் ஆற்றல் அழகு
அனைத்தையும் ஒட்ட உறிஞ்சி
அழியாப் பெருவல்லமையுடன்
ஒளிரும் சிலை.

Tuesday, May 24, 2011

கண்ணீரில் கரைந்துவிட்டன

கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும்
அக்காவிற்கு
ஒரு கவிஞன் தான்பாலாயக்கு
என்றாள் தங்கச்சிக்காரி.

மழைக் காலக் கோலம்போல்
கண்ணீரில் கரைந்துவிட்டன,
இப் பூமியின் இயற்கை எழிலை மோகித்து
ஆளரவமற்ற வனாந்தரத்து ஏரியருகே
முழுநிலாவினின்று இறங்கும்
படிக்கட்டுகள் வழியாய்
ஒரு காதல் இணை வந்து
இளைப்பாறிச் செல்லும் கற்பனைகள்.

இந்த முழு நிலா நாளில்
நம் துயரங்கள் தெளிவாகிவிட்டன.
அத்துடன் வழிகளும்.
இனி நடை ஒன்றுதான் பாக்கி.
இப் புவியின் இயற்கை எழிலை மோகித்து
நாமிங்கே இளைப்பாறி இன்புற.

Monday, May 23, 2011

நித்திய கல்யாணி

அது ஓய்வின்றி ஒழிவின்றி
எப்போதும் தன்னைத்
தன் மலர்களாலேயே அலங்கரித்துக்கொண்டு
தன் ஒரே லட்சியத்தில்
உறுதியாய் வாழ்ந்துகொண்டு
காற்றில் நடனமிட்டுக்கொண்டிருக்கும்
ஓர் அழகு.
தான் கண்டுகொண்ட அந்த இடத்தைவிட்டு
ஒருகாலும் நகராதிருக்க
தன் வேர்கொண்டு அது பற்றியிருக்கும் மண்.
எவர் கண்ணுக்கும் புலனாகாத பொன்.
தன் நெடுங்காலத் தவத்தின்மூலம்
தன் பச்சையத்தில் அது பற்றியிருக்கும் விஷம்
மிருகங்கள் அது தன்னை அண்டாதிருக்கமட்டுமின்றி
அனைத்து நோய்களுக்குமான மருந்தும்.
அந்திக் கருக்கல்களிலும் அதிகாலைப் பொழுதுகளிலும்
இரவுகளிலும் பகல்களிலும்
அதன் வெண்மலர்கள் வீசும்
அம்ருதப் பேரொளி.

Sunday, May 22, 2011

பேசாத சொற்கள்

மாடிக்கூளங்களை காற்று பெருக்கிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை
மரங்களின் அழுக்கினை மழை கழுவிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை
இந்த மைனாக்களின் குரல்களில்
வேப்பம் பழத்தின் இனிமை
இந்த மெளனத்தின் இதழ்களில்
சொற்கத்தின் இனிமை
எனினும் இங்கேதும் நிரந்தரமல்ல
அமைதியும் அழிந்து அக்கினி வறுக்கும்
காவ் காவ் என்று கரைகின்றன இன்று
கறுப்பு பறவை அலைகள் எங்கும்
நானா எப்படி என்றென் திகைப்பு
அறிந்தது போலும் தோன்றும்
அப்போது
தெய்வத்தின் குரல் போல
உதிக்கும் சில சொற்கள்
"நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்
நீ பேசாத சொற்களைப் பேசு"

Saturday, May 21, 2011

புலியின் தனிமை

[அ]
மனிதரற்ற வீதியில் நடந்து
வனத்துக்கு திரும்பியது
ஒருமனிதனையும் காணாத
பசி வேதனையால வாடிய புலி
மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள்
ஒரு நகரத்துக்குள் நுழைந்துவிட
அலறியடித்துக் கொண்டு ஓடி
தம் ஓட்டுக்குள் சுருண்டுகொண்ட மனிதர்
துப்பாக்கி தூக்கி பாய்ந்து வந்த ராணுவம்
கூண்டுக்குள் பிடிக்கத்துடித்த சர்க்கஸ் மனிதர்
பத்திரமாய் பிடித்து காட்டுக்குள் அனுப்ப
தீர்மானம் கொண்ட 'கருணையாளர்கள் '
யாவரையும் எண்ணி எண்ணி
தாளாத துக்கம் கனல
தகித்துக்கொண்டிருந்தது கானகத்தில்
[ஆ]
ஓ கடவுளே!
எத்தனை ஆபத்தானது இந்த அறியாமை!
அதி உக்கிரமான ஓர் அழகையும்
முடிவற்ற விண்ணாழத்தால்
பற்றவைக்கப்பட்ட பார்வையையும்
அதிராது சுமந்து செல்லும் பெரு நடையையும்
இங்கு அறிந்தவர் எவருமில்லையோ
தன்னை அறியாது
உறுமிக்கொண்டிருக்கும் இந்த வலிமை
மிருகச்சிறை
எவ்வளவு ஆபத்தானது!
[இ]
தன்னை அறிகையில் புலி
அறியாத வேளையில் விலங்கு.

Friday, May 20, 2011

ஒன்று

உணர்ச்சிப் பெருக்காய்
விரிந்துகிடக்கும் சேலைகள்தாம் எத்தனை!
நம் ஒற்றை உடன் நாடுவதோ
ஒன்றே ஒன்று.
எதை எடுத்துக்கொள்வதெனத் திகைத்து
ஒவ்வொன்றின்மீதும் படர்ந்து பிரிந்து
தேர்ந்தெடுத்த ஒன்றின் மேலே
தன் அத்தனைக் காதலையும்
கொட்டிக் குவித்தவாறே
முத்தமிட்டு அணைத்துத்
தன் மெய்மறந்தவாறே
ஒன்றி
உடுத்துத்
தன் அறையினின்றும் வெளிவரும்
அவள் உதடுகளில் முகிழ்த்திருந்த
புன்னகை சொல்லிற்று
காத்திருந்த அவனிடம்
அவள் காதல் கதைகளின் இரகசியம்.

Thursday, May 19, 2011

கொடுவனம்

தன்னந்தனியே
ஒரு காட்டிடையே
நிற்க நேர்ந்துவிட்டதா என்ன?
நன்பகல் வேளையிலும்
இரவின் ஒலியுடன்
இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்?
உயிரைப் பிடித்துக்கொண்டு
பதுங்கி வாழ் முயல்களுக்குமப்பால்
நிலவவே முடியாது
மடிந்தும் தோன்றாமலுமே போன,
யாரும் கண்டிராத
மென்னுயிரினங்களின்
மரண வாசனையோ
மரண பயமோ, இப்போது உன்
இதயத்தைப் பிசைந்துகொண்டிருப்பது?
கண்டுகொண்டனையோ,
இம்மரணத்தின் சன்னிதியில்
முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட வேண்டிய
கொடுவனத்தை?
அழிக்கப்படுமுன்
இவ்வேதனையிலேயே
விரைவாய் உன் மரணமும்
நிகழ்ந்துவிடுமென்றா
அவசர அவசரமாய் அதை எழுதி
மரணத்தை வென்றுவிடப் பார்க்கிறாய்?

Wednesday, May 18, 2011

சிறுவர் உலகம்

கல்லெறிபட்டும்
(ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே)
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு

Tuesday, May 17, 2011

தீராப் பெருந் துயர்களின்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் சாந்தா

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?

கூழாங்கற்கள் -கவிஞர் தேவதேவன்
இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
”ஐயோ இதைப் போய்” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும்?
என எண்ணினேன்
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்

Monday, May 16, 2011

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.

Sunday, May 15, 2011

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?

Saturday, May 14, 2011

காவல் நிலையம்

விலங்கோடு விலங்காய்க்
குடிகொண்டிருக்கும் வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்.

கையிலகப்பட்ட கைதிமீது
காவலன் ஒருவனிடன்
கண்மண் தெரியாமல் வெளிப்படும்
வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்:
பல்லாண்டுகளாய்
இப் புவியெங்கும்
அன்பு வழுவி
அறம்பிழைத்த காவல்தெய்வத்தின்
மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.
பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்து
பீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.

Friday, May 13, 2011

ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

Thursday, May 12, 2011

என் அறைச் சுவரை அலங்கரிக்கும் நிலக் காட்சி ஓவியம் ஒன்று...

அட, அற்பனே!
யாருக்குச் சொந்தமானது அது?

ஏழைகளுக்கு எட்டாத
சற்று விலையுயர்ந்த அந்த ஓவியத்தை
வாங்கி மேடைபோட்டு முழங்கி வழங்கி
தன் மேலாண்மையை நிறுவிவிட்டதாய் எண்ணும்
மடையனுக்குச் சொந்தமாகுமோ அது?

தனது அரிசிபருப்புக்காய் அதை விற்றுவிட்டதால்
அந்த ஓவியனுக்கு இனி சொந்தமாகாதோ அது?

இன்னும் அதன்கீழ் தன் கையப்பம் காணும்
அவன் கர்வத்தையும் அடக்குமாறு
அது தீட்டப்பெற்றிருக்கும் பலகைக்கு
அவ்வோவியத்தில் கனலும்
வானம், ஒளி, தாவரங்கள்
பேரமைதி கொண்டனவாய்
தன் நிழலிலேயே நின்றபடி
தாழ்ந்து குனிந்து
புல் மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள்
இவர்களுக்குச் சொந்தமானதில்லையா அது?

அனைத்திற்கும் மேலாய் நாம் கண்டுகொள்ள வேண்டிய
அறநியதிகளுக்குச் சொந்தமானதில்லையா அது?

Wednesday, May 11, 2011

ஓடும் இரயில் வேகம் தொற்றி

ஓடும் இரயில் வேகம் தொற்றி
அதிர்ந்தன சப்தநாடிகளும்
அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது?

புவி முழுமையையுமாய்
அடக்கி நெரித்தபடி
விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தை
நேர்நின்று பார்த்தவனாய்
அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும்.

உடைந்த ஆற்றுப்பாலம் கண்டு
மூச்சிரைக்க ஓடிவந்து நின்று
ஆபத்துக்கு ஆபத்துரைக்கும்
அறியாச் சிறுவர்கள்போலும்
வாழ்ந்து முடிவதில் என்ன பயன்?

இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற
கைகளும் கால்களும் தலையுயாய்
குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி?

வாள்போலும்
ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில்வண்டியும்
திரும்பி ஓர்நாள்
ஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக்கொண்டோடாதா?

Tuesday, May 10, 2011

எனது கவிதை

ஆராய்வோர் யாருமற்று
இயங்கும் ஓர் ஆய்வுக்கூடம் அது
தான் ஆராயும் பொருள் யாது என்று
அதற்குத் தெரியாது

அது தன்னைத்தானே
விளக்கிக் காட்டத் தொடங்கி
முடிவற்று விளக்கிக்கொண்டிருக்க
வேண்டிய கட்டாயத்தில் விழுந்து
பரிதாபமாய் விழிக்கிறது

அதற்கு ஆனந்தம் என்று
பெயர் சூட்டிப் பார்த்தார்கள்;
அழுதது அது.
அன்பு எனப் பெயர் சூட்டிப் பார்த்தார்கள்;
உதைத்தது அது.
குழந்தைமை என்றார்கள்;
பேரறிஞனாகித் திமிர்ந்த்து அது.
கருணை என்றார்கள்;
காளியாகி ஊழிக்கூத்தாடியது.
இவ்வாறாய் இவ்வாறாய்
எல்லாப் பெயர்களையும் அது மறுத்தது

தன்னை ஒரு பெயர் சூட்டத்தகும் பொருளாக்கவே
முனைபவர் கண்டு
கண்ணீர்விட்டது அது.
எனினும்
பொருளுலகெங்கும்
ஓர் ஊடுறுவல் பயணம் மேற்கொண்டு
தன் ஆய்வைச் செய்தது அது

எல்லாவற்றைப் பற்றியும்
அது தன் முடிவை வெளியிட்டது
தன்னைப் பற்றி மட்டுமே
அதனால் சொல்ல முடியவில்லை

ஏனெனில்
அது தன்னை அறியவில்லை.
ஏனெனில்
‘தான்’ என்ற ஒன்றே
இல்லாததாயிருந்த்து அது

Monday, May 9, 2011

வீடு பெறல்

மனைவியும் குழந்தைகளும்
விருந்தாடச் சென்றிருந்தனர்.
அப்போது எனக்குத் தெரியாது
அதில் உள்ள இரகசியம்

விஷயத்தை அறிந்த வேலைக்காரியும்
வராது ஒழிந்தாள்
வெடுக்கென ஒளி
தன் உடலை மறைப்பதுபோல்

மௌனத்தின் ஆழத்தில்
கரைந்துகொண்டிருக்கும் பாறாங்கற்கள்...
மேற்பரப்பெங்கும்
படரத் தொடங்கியிருக்கும் ஏகாந்தம்...

கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஒழுங்கின் வியப்புடன்
கச்சிதமாக இருந்தது சமையலறை
எனக்கு நானே சமைத்துக்கொண்டு, உண்டு
உடனுக்குடனே பாத்திரங்களையும் பளிச்சென்று
சுத்தம் செய்துவிட்டு
(அதுதான் மிகக் கடினமான வேலையாமே)
ஏகாந்தத்தில் மிதந்து அசைந்துகொண்டிருந்த
என் நாற்காலியில் அமர்ந்தபோது
யாராவது வரவேண்டுமென்றிருந்தது
காரணம்: அவர்களுக்கு நான் என் கையால்
ஒரு டீ போட்டுத் தர முடியும் என்பதே.
வீட்டின் முகமும்கூட முற்றிலும் மாறிவிட்டிருந்தது
ஒரு பாறாங்கல்லே கரைந்துவிட்டது போல்; இனி
புத்தம் புதிய விருந்தினர்களையே
அது எதிர்பார்ப்பதுபோல்

Sunday, May 8, 2011

சில அரசியல்வாதிகளையும் ஒரு கவிஞனையும் பற்றிய குட்டிக்கதை

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது
எல்லாம் சரியாகிவிட்டிருந்தது

இத்துணை எளிமையாய் உண்மை இருப்பதை
ஏற்க இயலாது வாய் அலறிக் கொண்டிருந்தது மலை.
சில தானியமணிகள் கூடிக் கோஷமிட்டுப் பேசின
அந்த மலையடிவாரம் அமர்ந்து
உலகை உய்விக்க

”முதலில்
பறவைகள் கண்ணில் நாம் பட்டுவிடக்கூடாது
அவசரப்பட்டு
சகதியில் குதித்து அழுகிவிடவும் கூடாது
பத்திரமாய்
களிமண்ணில் போய் புதைந்து கொள்ளவோ
உதிர்ந்த, சருகுகளுக்கடியில் சென்று
பதுங்கிக் கொள்ளவோ வேண்டும்
கதவு தட்டப்படும்போது
வெளிவரத் தயாராயிருக்க வேண்டும்”

அலறி அச்சுறுத்தும் மலைகளின், காடுகளின்
ஒளி நிழல் சலனத்தால்
உருவாகிய புலிகளும் பாம்புகளும்
நம் குரலை எதிரொலிக்கும்
நம் மொழிகள்...

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது
எல்லாம் சரியாகிவிட்டிருந்தது
முதலில் அவனுள்ளும்
அப்புறம் அவனைச் சுற்றியும்

Saturday, May 7, 2011

கட்டுச் சோறு

எவ்விதம் நான் மனச்சிக்கல்
மிக்கவோர் மனிதனாய் மாறிப்போனேன்?
எவ்விதம் என் மனச்சிக்கல் சேற்றினுள்
பூக்கின்றன தாமரைகள்?

அப்பொழுதையும் அவ்விடத்தையும்
அவர்கள் விட்டேற்றியாய் எதிர்கொண்டதைக் கண்டு
வியப்பும்
நான் தூக்கிக் கொண்டுவந்த சுமையை எண்ணிக்
கூச்சமுமாய்
சஞ்சலத்தில் ஆழ்கிறேன் சகபயணிகள் மத்தியில்
என் கட்டுச்சோற்றை நான் பிரிக்கும்போதெல்லாம்

ஆனால் கட்டுச்சோற்றின் ருசி அலாதி, மேலும்
அதன் சௌகரியமும் நிச்சயத்தன்மையும்
விரும்பத்தகாததா? எல்லாவற்றிற்கும் மேல்
இது ஒன்றும் போதை தரும்
நினைவுகளோ கனவுகளோ அல்லவே.
தூராதி தூரமும் காலமும் கடந்து நீளும்
அன்பின் மெய்மை அன்றோ இது!

அற்புதம்! என அமர்ந்தார்கள்
அவர்கள் என்னோடு.
அங்கங்கு கிடைத்தனவும் என் கட்டுச்சோறும்
கலந்தன உற்சாகத்தோடு

Friday, May 6, 2011

கனவுகள்

முலை பருகிக்கொண்டிருக்கும்
சிசுவின் மூடிய இமைக்குள்
தாய்முலையாய் விரிந்த ஒரு சுவர்
பிஞ்சுக் கைவிரலாய் அதில் ஒரு பல்லி
பல்லியை அலைக்கழித்து விளையாடுகிறது
முலைக்காம்புப் பூச்சி

அலைக்கழிக்கும் பூச்சியை மறந்து ஒரு கணம்
தன்னுள் ஆழ்ந்த பல்லியின் கனவில்
தாய்முலை பற்றிப் பால் பருகும் சிசு

முலை திறந்து நிற்கும் தாயின் கனவில்
பாற்கடலில் தவழும் குழந்தை

அலையும் பூச்சியின் இமைக்குள்
பால் சுரக்கும் அகண்டதோர் முலையின்
ஊற்றுவாயாய்த் தான் ஆகும் கனவு

பாலூறும் உணர்வினையும்
பாப்பாவின் தொடுகையையும்
தன் கனவில் அனுபவிக்கும் சுவர்

‘சிறந்ததோர் கனவு கண்டவர்க்குப் பரிசு’
என்ற அறிவிப்பு ஒலிக்கவும்
காணாமற்போன தாயைத் தேடிப் போய்க்
காணாமற்போன என் கவிதையைக்
கனவு கண்டதால்-
எல்லாம் கனவு ஆனதால் நான் விழித்தேன்,
மேலானதோர் யதார்த்தத்தின் முள்படுக்கையில்

Thursday, May 5, 2011

பார்த்தல்

ஆளரவமற்ற வனாந்தரத்தின்
நீர் விளிம்பில் நின்றிருக்கும்
நார்சிசஸ் மலரையும்

தன் ஒளியால்
துலங்கும் புவிப் பொருளின் அழகையெல்லாம்
அணு அணுவாய் ரசித்தபடிச் செல்லும்
நிலவையும்

கவியையும்

துயர் தீண்டுவதில்லை ஒருக்காலும்

Wednesday, May 4, 2011

விரும்பினேன் நான் என் தந்தையே

பேயோ, தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப் படைத்தது உம்மை என் தந்தையே
”நீ படித்தது போதும்
எல்லோரும் மேற்படிப்புப் படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகளையெல்லாம்
யார் செய்வார்?” என்றறைந்தீர்

கடும் உழைப்பை அஞ்சினேனோ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே-
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனோ?

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக்கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும் மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய்ச் சுற்றி வரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்துக் காத்துக் கிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே

வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி நடமாடவும்
சாதி மதம் இனம் நாடு கடந்து அலைகிற
யாத்ரீகப் புன்னகைகள் அருந்தி என் உளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்
விரும்பினேன் நான் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடனமாடவும்
விரும்பினேன்

இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்

Tuesday, May 3, 2011

ஓநாய்கள்

பசித்த நம் விழிகளில்
உணவின்மீது அழுந்தும்
பற்களின் அசைவில்
ஊறிக் கலக்கும் உமிழ்நீரில்
இன்னும் இருக்கிறதோ அது?

மிருக மூர்க்கத்திற்கும்
கருணைக்குமிடையே
எத்தனை லட்சம் ஆண்டுகளாய்
நடந்துகொண்டிருக்கிறது
இந்தச் சமர்?

உயிரின் உக்கிரமேதான் ஆயின்
அது சக உயிரொன்றிற்குத் துயராதல் அறமாமோ?

ஓநாய்கள் அழிவை நோக்கி
அருகி வருகின்றன என்பது உண்மையா?
அல்லது, நம் இரத்தத்துள் புகுந்து
இன்றும் ஜீவித்துக்கொண்டிருக்கும்
அதிநவீனத்துவ தந்திரமோ?

மனித அணுக்கத்தாலோ
இரக்கத்தாலோ
என்ன ஒரு பின்வாங்கலோ
ஓநாயின் மரபணுவுள்
ஏதோ நெகிழ்ந்து
திசை மாறி
நாய்கள் பிறந்து
மகத்தானதோர் அறியாமை விழிகளில் மின்ன
வாலாட்டிக்கொண்டு
தாமும் மனிதனை நெருங்குகின்றன?
மனிதனைப் போலவே கனவு காணும் ஒரே மிருகம்!

மனிதனும் நாயும்
நெருங்கிக் குலவிக்
கொஞ்சி மகிழும்
இரகசியமும் இலட்சியமும்தான் என்ன?

Monday, May 2, 2011

கோயில் கட்டுதல்

எங்கும் இருப்பவனை
இங்குதான் இருக்கிறானென
எண்ணலும் அறிவாமோ?

எங்கும் திரிபவனை
இங்கேயெ இரு என்று
முடக்குதலும் முறையாமோ?

அவனைக் காணல் இன்றி
நம்மையே அவனில் காணல்
நகைத்தகு கூத்தல்லவா?

எழுப்பிய சுவர்கள்தாம்
இருளுண்டாக்குவதறியாமல்
விளக்கேற்றி வழிபடுதல்
ஒளிகண்டார் செயலாமோ?

Sunday, May 1, 2011

நாளின் முடிவில்

களைத்துப்போன என் உடலைப்
படுக்கையில் சாய்க்கும் போதெல்லாம்
உன்னை உணர்கிறேன்.
எத்துணை ஆதரவுடன்
என்னைத் தாங்குகிறாய் நீ!
எத்துணை ஆறுதலுடன்
என் இமைகளை வருடி மூடுகிறாய்!
எத்துணைக் காதலுடன்
இமையாது என்னை உற்று நோக்குகிறாய்!

என்னைத் தூங்க வைத்தபின்
என் தூக்கத்திற்குள்ளும் வந்து விழித்திருப்பாயோ?
ஒரு கணமும் பிரிவென்பதில்லாப் பேரன்புப்
பெருங்கருணை நின் காதல்!
நான் அறிவேன்,
குற்றவுணர்ச்சியாலும் காயங்களாலும்
நான் துயிலின்றிப் புரண்டுகொண்டிருக்கையில்
நீ என் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என்பதையும்
அது ஏன் என்பதையும்

இல்லை, அப்போதும் தூர நின்று
என்னைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாய் நீ,
நீச்சல் தெரியாதவனை
நீரில் தள்ளிவிட்டுப் பார்த்து நிற்கும்
முரட்டுத்தனமான நீச்சல் ஆசிரியனைப்போல

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP