டிசம்பர்
இரவைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான்
இரவுக் காவலன் ஒருவன்
காவலனின் கண்களில்
உறக்கத்தைத் தூவுகிறது
பகலுடன் கலக்க நினைத்த இரவு
வாசல்களெங்கும்
மலர்களுக்குமுன் மலர்ந்திருந்த
மார்கழி மாதக் கோலப் பெண்கள் –
உதயச் சிசுவை அள்ளித் தத்தம்
வீட்டுள் எடுத்துச் சென்றனர்
2.
விடிகாலைப் பனியும்
விடிகாலைச் சூரியனும்
காதலர்கள்
விடிந்த காலையில்
தன் இயல்பினாலேயே
தன் காதலியை இழந்த
தனிமையில் நின்றான் சூரியன்
பனியின் சுவடுகளை
எங்கும் தாங்கியிருந்த
இயற்கையில் களித்து ஏகாங்கியானான்
3.
இளமையின் விழிகளை முத்தமிடுகிறது பனி
நடுங்கி அழுகிறது என் முதுமை
என்னைவிட முதிர்ந்த என் தோட்டமோ
தளிரும் பூவும் கனியும் பறவைகளுமாய்ச் சிரிக்கிறது
ஒரு மூலையில்
சுள்ளியும் சருகும் நெருப்பும் தந்து
என்னைத் தன்னோடணைத்துச் சேர்த்துக்கொள்கிறது
நெருப்பை என் விரலிடுக்கில்
ஒழுகவிட்டதால் எழுந்த புகை –
பனி வேடமிட்ட பாவி –
காற்றில் ஏறித் தோட்டமெங்கும் திரிந்து
கண்ணைக் கரிக்கிறது
கருகுகின்றன மலர்மொக்குகள்