புள்ளிக் குயில்
எங்கள் வீட்டு முருங்கை மரத்தில்
அதனைக் கண்டேன்
(மரங்கள் செழிக்கும் மழைக் காலங்களில் மட்டுமே
இங்கே அபூர்வமான பறவைகள் வருகின்றன)
அதன் பெயர் தெரியவில்லை எனினும்
அதை நான் நன்கு தெரிந்தவனாகவே இருந்தேன்
நான் எதையோ பார்த்து நிற்பதைக்கண்ட வேலையாள்
வந்து பார்த்து, ’புள்ளிக்குயில்’ என்றான்
’சரி’ என்ற நான் ஓசைப்படாமல் பின் நகர்ந்து
பொம்மையோடு விளையாடிக்கொண்டிருந்த
என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு
அடுக்களையில் கைச்சோலியை போட்டுவிட்டு வரும்படி
மனைவியையும் அழைத்துக்கொண்டு…
பூமி அதிராது வந்து அம் மரத்தடியில் ஒண்டினோம்
எங்களுக்காகவோ புள்ளிக் குயில்
அதுவரையும் பறந்து செல்லாதிருந்தது?
என் வேலையாள் கையில் கவண்கல்லோடு வந்தான்
அதுவரையம் அது பறக்காதிருந்தது
குறிபார்த்து கவண் ரப்பரை இழுத்த அவன்மீது
வெறுப்பை உமிழ்ந்த என் மனைவியின் பார்வையை
வேண்டாம் வேண்டாம் எனத் தடுத்தது
துயரம் தோய்ந்த எனது புன்னகை
அதற்கு உதவவேண்டுமென்றும்
எனக்குத் தோன்றவில்லை
ஆனால்
கவண்கல் பாயும் போதும்,
கவண்ரப்பர் இழுபடும்போதும்
துடித்தது எங்கள் உயிர்
அவன் இன்னொரு கல்லை எய்தான்
இறக்கையில் சிலும்பலாய் அடிபட்டு நகர்ந்து
இன்னும் எங்கள் பார்வையில் விலகாதிருந்தது அது
அவன் இன்னொரு கல்லை எய்தான்
திடுக்கிடல் ஏதுமில்லை
’போதும்’ என நினைத்ததுபோல்
சிறகடித்துப் பறந்தோடிற்று அது