பறிக்கப்படாத பூக்கள்
ரோஜாப் பூக்களின் மத்தியில் உன் முகம் –
அதுவும் ஒரு பூ என்றிருந்தேன்.
ஆனால்
பூக்கள் பூக்களைக் கொய்வதில்லையே!
தன் பூந்தோட்டத்தில் நின்று
பூப்பறிக்கும் பூக்காரி ஒருத்தி
சின்ன மீன்களை விழுங்கிக்கொண்டு நகரும்
ஒரு ராக்ஷஸ மீனைப்போல் தோன்றுகிறாள்.
அந்தப் பூந்தோட்டத்தைப் போல
இது வியாபாரத்துக்காய்ப் போட்டதல்ல!
வெறும் அழகுக்கு
என்னை முட்டாள் என்று ஏசு
பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்
எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்.
என் ரோஜாத் தோட்டத்துள் புகுந்து
என்னைப் பரிதாபமாய் நோக்கும் பெண்ணே!
என்னை மன்னித்துவிடு! விலகு!
உன் ஆசை தன்னை உணராதது
சரி, போகட்டும்.
ஒன்றே ஒன்றைமட்டும்
பறித்துக்கொள் – உன் ஆசைக்கு.
மற்றனைத்தையும் விட்டுவிடு – அந்த அழகுக்கு.
ஆனால் இதைத் தெரிந்து கொள்:
உன் விரல்களுக்கு மட்டுமல்ல,
ரோஜாவின் மென்மையும் மணமும்
போட்டோவுக்குக்கூட
அகப்படமாட்டேனென்கிறது
மட்டுமல்ல; இதற்கெல்லாம் மேலே ஒரு உண்மை:
பறிக்காத இப்பூக்களின் வெறும் அழகில்தான்
காய்க்கிறது
என் பசி தணித்து உயிர் வளர்க்கும் கனி