கவிஞர் தேவதேவனுடன் ஓர் உரையாடல், ”குவியம் கலை மையம்” ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வு.
இந் நிகழ்வு 10.10.2025 அன்று கேள்வி பதில் பாணியில் இனிதே அமைந்தது.
கவிஞர் தேவதேவன் தன் பால்ய பருவம் பற்றி உரையாடுகையில் மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
முதலாவது, அவர் குழந்தை பருவத்தில் இருந்தே சொல் எடுத்து வார்த்தையாடுவதில் ஈடுபாடு இல்லாதவராகவும், அதற்கு நேர்மாறாக தன்னை சுற்றி நிகழ்வனவற்றில் அதிகம் கவனம் உள்ளவராகவும் இருந்தார் என்பது.
இரண்டாவது, அவர் சகோதரி அவர்களுடைய தந்தையாருக்கு புத்தகம் படித்து காண்பிக்கும் பழக்கம் உடையவராக இருந்ததால், மிக சிறிய வயதிலேயே கேள்வி ஞானமாகவே நிறைய புத்தகங்களை அறியும் வாய்ப்பை பெற்ற ஒருவராக இருந்தார் என்பது.
மூன்றாவது அவர் 1948 ஆம் வருடத்தில் பிறந்தமையாலும், 1945 உலகப் போர் பற்றிய உரையாடல்கள் அவரை சுற்றி நிகழும் சூழல் நிலவியதாலும், அச்சூழல் அவருள் எழுப்பிய கேள்விகளை அச்சிறு வயதிலேயே கொண்டவராக இருந்தார் என்பது.
கவிஞர் தேவதேவனின் தந்தை ஈ.வெ. ரா அவர்களின் அபிமானி என்பதால் அவரிடமே தன் மகனுக்கு பெயரிடும்படி கேட்டு கொண்டார். ஈ.வே. ரா அவர்களும் கைவல்ய நவநீதம் எனும் தத்துவநூலின் (ஆசிரியர்: தாண்டவராய முதலியார் ) மேல் கொண்ட தீவிர ஈடுபாட்டால், நன்பர்களால் கைவல்யம், கைவல்ய ஸ்வாமிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டவரும், தனது பெரும் மதிப்பிற்குரியவருமான அன்பர் பெயரை குழந்தைக்குச் சூட்டினார். தனக்கு நினைவு தெரியும் வயதை அடைந்ததும் அப்புத்தகத்தை நூலகங்களில் தேடி சென்றதாகவும், தன் 19ஆவது வயதில்தான் வெளியூர் நூலகம் ஒன்றில் அதை வாசித்ததாகவும், அத்தேடலில் பிற தத்துவ புத்தகங்களை வாசிக்கும் நல் வாய்ப்பு அமைந்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.
இத்தனை தத்துவ தரிசனங்களும் மனிதனை ஆற்றுப்படுத்த தவறியதைத் தான் உணர்ந்ததாலே, அதை பற்றி தீவிரமாக சிந்தித்ததாகவும், அச்சிந்தனையில் இருந்து தான் கவிதையின் மதம் என்ற தரிசனத்தை தான் அடைந்ததாகவும் கூறினார்.
நம் தற்கால வாழ்க்கை முறை இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி இருப்பதால், நாம் மெதுமெதுவாக இயற்கை மீது நமக்கு இருக்க வேண்டிய அன்பையும் அக்கறையையும் விட்டு விலகி மனிதனால் உருவாக்கபட்ட சின்னங்களையும் உருவ சிலைகளையும் கொண்ட மதங்களின் வழிப்பாட்டை சென்று அடைந்துவிட்டோம். மதத்தை ஒரு பற்றுகோளாக இறுக பற்றி கொள்ளும் பண்பு மனிதத்திடையே தோன்றிவிட்டது. மதங்களிலேயே திளைத்த மனித மனம் கவிதை தருணங்களை உணரும் ஆற்றலை இழக்க தொடங்கியது.
மனிதம் மனிதத்தை நோக்கி நிறைவான பயணம் ஒன்றை மேற்கொள்ள தேவையான எல்லா தரிசனங்களையும் கவிதையின் மதம் தன்னுள் கொண்டிருக்கிறது. அது ஓன்றே எல்லோர் உள்ளும் உறங்கும் கவிஞனை தொட்டு எழுப்பும் வல்லமை பெற்று உள்ளது, அவ்வாறு நிகழும்போதே அமைதியும் பெருவாழ்வும் அமையும் என்பதே அவர் கூற்று.
ஒரு கவிதை என்பது பெருவெளி நம்மை நோக்கி பெரும் நேசத்துடன் நீட்டும் ஒரு கரம் என்றும், அதை பற்றிகொண்டே நாம் ஒவ்வொருவரும் மேலெழ முடியும் என்பதையும் ஆணித்தரமாக முன் வைக்கிறார்.
ஒரு சிறந்த கவிதை என்று எதை கூற வேண்டும் என்ற கேள்விக்கு அவர் பதில் உரைக்கையில், நாம் நம் கவி மனம் கொண்டு உணரும் தரிசனங்களே கவிதைகள் ஆகின்றன. இயற்கை, உறவுகள், செயல்கள், பெயர்கள், அகநிலை சொற்கள் யாவற்றிலும் கவிதை உள் உறைந்துள்ளது. அவற்றை வெளி கொண்டு வருபவனே கவிஞன் ஆகிறான் என்கிறார். கவிதையை விமர்சனம் செய்யும் அளவுகோளும் அதுவாகவே இருக்க வேண்டும் என்றும் மாறாக காட்சி விளையாட்டுகளையும் சொற் சேர்கைகளையும் கவிதை என்று மயங்கி கொள்ள கூடாது என்பதையும் கூறுகிறார்.
நாம் நம் நெருங்கிய நண்பரிடம் ஆத்மார்த்தமாக உரையாடும் போது எவ்வாறு அர்த்தம் பொருந்திய ஒரு உணர்வு நிலையை கொண்டிருப்போமோ அதே உணர்வு நிலையிலேயே கவிதையும் எழுதப்பட வேண்டும் என்கிறார்.
8000கும் மேற்பட்ட கவிதைகள், சில சிறுகதைகள், ஒரு நாடகம், ஒரு கட்டுரை தொகுதி என்று அனைத்து இலக்கிய வகைகளின் ஊடாக சென்று கொண்டிருக்கும் அவர் பயணத்தில் நாமும் ஒரு சில மணித்துளிகள் இணையும் நல்வாய்ப்பு கிடைக்க பெற்றோம்.
நன்றி,
பிரியா, பெங்களூர்.