அசையும் எந்தப் பொருளைக்…
அசையும் எந்தப் பொருளைக்…
காண்கையிலும்
அவன் மனம்
களி கொண்டாடுவதைச்
சந்தேகிக்கிறாயா?
காற்று உன் உடலைத் தழுவுகையில்
என்ன நடக்கிறது
எண்ணிப் பார்!
Poet Devadevan
அசையும் எந்தப் பொருளைக்…
காண்கையிலும்
அவன் மனம்
களி கொண்டாடுவதைச்
சந்தேகிக்கிறாயா?
காற்று உன் உடலைத் தழுவுகையில்
என்ன நடக்கிறது
எண்ணிப் பார்!
அந்த பணிப்பெண் மூதாட்டி
அய்யா நீங்கள் தெலுங்கா?
என்று விளித்துக் கேட்டார்.
இல்லை, தமிழ் என்றேன்.
இவ்வளவு பேச இயலும் மொழி
போதாத துயரம் பொங்கியுள்ள முகம்
நாம் கற்றே ஆகவேண்டிய மொழி இதுவெனச்
சொல்லும் முகம்!
காகிதத்தில் எழுத அமரும்போதே
அதன் நிழலும் உடன்வந்தே
அமர்ந்து கொள்கிறது.
நிழலையும் சேர்த்தே
அவன் எழுதிக்கொண்டிருப்பதை
அவன் அறியும்போது
அலறி ஓடுகிறது நிழல்
பென்சிலா,
ஒளி அல்லவா
இப்போது எழுதிக் கொண்டிருக்கிறது,
சூரியன் படைக்கும் உலகாய்!
ஞாயிறு விடுமுறையில்
பூங்கொடி IAS
தனது பங்களாவின்
உபவனச் சோலையில்
நேர்கொண்டு நிமிர்ந்த முகமும்
ஆன்றமைந்திருக்க,
நிலம்தொட நெருங்கிய
நீள்நெடுங்கருங்கூந்தலை
நேர்த்தியுடன் விரித்தபடி செல்லும்
நடைஉலா கண்டு
பறவைகளின் தெய்வமோ என
வாய்பிளந்து நின்றன காண்,
ஆங்குள்ள மயில்கள் எல்லாம்!
தேவதேவனின் புதிய கவிதை நூல் ”நிலவில் உதித்த கார்முகில்” முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கலாம்.
முன் வெளியீட்டு விலை - ரூ 350 (தபால் செலவு ரூ 60 தனி)
டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை முன் பதிவுகள் செய்யலாம்.
ஜனவரி முதல் வாரத்தில் நூல் அனுப்பி வைக்கப்படும்
Gpay எண்: 9789878967
தொடர்புக்கு: போன் 8015861730 மற்றும் 9789878967 (Van Gogh Publications)
----------------------------------------------------------------------------
குளிரூட்டப்பட்டு
அடைக்கப்பட்டு
ஊர்ந்து செல்லும்
வண்டிக்கு வெளியே
பிற வாகனங்களும் மக்களும்
சன்னலைத் திறந்தோ, கதவைத் திறந்தோ
பார்த்தாலே
கதறிவிடும் குரலினை அடக்கியவர்களாய்
கைவிடப்பட்ட
துயர்க்கனலுடனே செல்லுவதேன்?
அன்பு அழகு அறம் கொண்டு
வனையப்பட்ட சாலையா இது?
எத்துணை இனிமையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
அவர்கள் வண்டி?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
இக் கவிதை துயர்மலி உலகின் பெருவலி(2023) தொகுப்பில் உள்ளது.
பெருங்களியிலிருந்தோ
பெருந்துயரிலிருந்தோ
பிறப்பதற்கு முன்னால்
மோனக் கருவறையிலிருந்தது
கவிதை
பிறந்த உடன் அதுபடும் துக்கம்
நமக்கானது
இன்பமோ உயிரின் இயல்பானது
இயல்பும் துக்கமும் கொண்டு
அது சுட்டும் பாதைதான்
அது படைத்துவிட்ட மெய்வழிச்சாலை.
காலமற்ற வெளியெங்கும்
நம்மால் உருவாக்கப்படாமலே
உள்ளதுதானே கடவுளின் ராஜ்ஜியம்?
அற்புத இயந்திரங்களால்
நம்மால் உருவாக்கப்படுவதும்
கடவுளின் ராஜ்ஜியமாகவே
ஏன் இருக்கக்கூடாது?
அப்படித்தானே இருக்கவேண்டும்?
நான் இருக்கிறேன்
ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் என்று
மொத்த சொற்களையும்
இரண்டே சொற்களாக்கிவிட்டோம்.
நான் எனும் இந்த உடல்
உழைக்கிறது
தன்னைக் காத்துக்கொள்வதற்கு!
இருப்பதற்கு!
இந்த உலகத் துயரையும்
காரணத்தையும்
நான் என்பதே அது என்பதையும்
அது கண்டுகொண்டது.
மூட்டிக் கனலவைத்த கரிய கல்லில்
தோசை வார்க்கத் தொடங்கினார் யசோதரை
வெந்து அழிந்தது ஒரு பக்க நுண்தளம்
திருப்பிப் போட்டவேளை மறுபக்கத்திலும்...
நடுவிலுள்ள பதமான தோசையையும்தான்
உண்ணுவதற்கு உகந்த எத்துணை
அற்புதமான உணவாக்கியிருந்தார் அவர்!
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
இக் கவிதை மின்னற்பொழுதே தூரம்(1981) தொகுப்பில் உள்ளது.
வம்சி வெளியீடான இரண்டு பெருந்தொகுப்புகளில் முதல் பொருந்தொகுப்பில் உள்ளது.
இந்த இடத்திற்கு அவன்
விரும்பி வரவில்லை
விரும்பாமலும் இல்லை
அவன் பார்க்கும்போது
நடக்கும் செயலையும்
நடக்கப்போகும் செயலையும்
பார்க்க அல்லவா வந்திருக்கிறான்?
இங்கே யாவருக்குமாய் எழும்
பரிவும் அதன் பான்மையும்
யாரோடும் எதனோடும்
சம்பந்தப்படாததால் அல்லவா
மகத்தானதாயும் பேரன்பாயும் உள்ளது?
பாடகி: தீபா
இக் கவிதை நார்சிசஸ் வனம்(1996) தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் என்ற நீண்ட கவிதையிலுள்ள ஒரு பகுதி.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
இதோ கவிதையின் தெய்வம்
தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்!
இசை தொடங்கிவிட்டான்!
அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி
தொடங்கிவிட்டது காண்
ஓர் ஒத்திசைப் பிரம்மாண்டம்! பேரொளி!
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்
தன் கண்கள் எத்துணை அழகு என்பதை
தன்னுணர்ந்த அழகியா அவர்?
கண்களை விரித்து
கடைக்கண்ணால் பார்த்தது எதை?
பார்க்கச் சொல்லியது எதனை?
காண முடியாத கருவி ஒன்றை
கண்டுகொண்ட அருட்செயலா?
கடவுளே, அது உம்மையும்
உம்முள் நிறைந்த தன்னையுமே
என அறியாத பேதமையா அவருடையது?
மன்னியுங்கள் ஆண்டவரே!
அழகு எவ்விதமானாலும்
அது நீரே அல்லவா?
குழந்தைகளின் எந்த விளையாட்டுகளானாலும்
அதற்கு மிக அண்மையில்தானே நீர் இருக்கிறீர்?
அந்த விழிகளின் அழகையும்தான்
நாம் பார்க்கிறோமில்லையா?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP