யாருமறியாததென்ன?
ஆரத் தழுவுமோர் அன்போ!
அன்பு உயிர்ப்பித்த நெஞ்சின்
வலியோ? கனியோ?
தீண்டி நின்றதொரு
பிறப்பு இறப்பு ஒழிந்த
இன்மையோ? மவுனமோ?
எவர்க்கும் ஒளிக்காதிருப்பதும்
யாருமறியாததென்ன
உயிர்கனலும் இவ்வேளையினை?
Poet Devadevan
ஆரத் தழுவுமோர் அன்போ!
அன்பு உயிர்ப்பித்த நெஞ்சின்
வலியோ? கனியோ?
தீண்டி நின்றதொரு
பிறப்பு இறப்பு ஒழிந்த
இன்மையோ? மவுனமோ?
எவர்க்கும் ஒளிக்காதிருப்பதும்
யாருமறியாததென்ன
உயிர்கனலும் இவ்வேளையினை?
இயற்கை இன்பங்களையும் கலைத்துவிடும்
ஏழ்மைத் துயர் கவிந்த வானம்
வற்றிய குளம் பார்த்துப் பார்த்து
வறண்ட நிலங்கள் தகிக்க
வாடிச் சோர்ந்த குடிசைகள்
சிறு காற்றுக்கும் அஞ்சி நடுங்க
எங்கு தொலைந்தனர், இவ்வூரின்
திறமைசாலிகளான மனிதர்கள்?
அவர்களுக்கும் கல்வியும் செல்வமும்
வழங்கப்பட்டதல்லவா,
அறமற்ற பொய்மதத்தையும் மீறி
அறம் வென்று?
உள்ளத்தின் சிவப்பை யெல்லாம் ஒழித்துவிடும்
செல்வத்தின் கரி மண்டிய வானம்.
தோல் சிவப்பே நமது நெறியென்றெண்ணியோ
சிவப்புத் தோல் நண்ணிச்
சிவப்புத் தோல் போர்த்திக்கொண்டு
பொய்மதம் பீடித்துலாவுகின்றன நகரங்கள்?
உரைக்க வொண்ணாததாய் உணர வொண்ணாததாய்
வான் நிறைத்து அழுகின்றனவோ
மெய் மதமும் துயரமும்?
கடல்தான் எத்தனை அழகு!
அதன் அழகில் நாம் கரைந்துபோகும்
நாளும் வராதா?
என்றாவது ஓர் அந்தியில்
ஒரு நல்முத்து க்ண்டு
நம் வாழ்வும் மலர்ந்திடாதா?
கூலித் தொழில் முடிந்து
எங்களுக்குத் தின்பண்டம் சுமந்துவரும்
மதிய உணவுத் தூக்குச்சட்டிக்குள்
முத்துச் சிப்பிகள் சிலவற்றை
வாங்கி வந்தார் எம் தந்தை.
கடலுக்குள் இருப்பவை போலவே
அமைதியும் வியப்புமாய்
திறந்து திறந்து வாய் மூடிக்கொண்டிருக்கும்
சிப்பிகள்.
உருண்டு திரண்டு பெரிதாய் ஒளிவீசும்
முத்து எனில்
அறுத்து அலசிப் பார்ப்பதற்கு முன்னேயே
வாய்திறந்து நிற்கும் சிப்பி
தானாகவே காட்டிவிடும்.
”அப்பா, இதோ இந்தச் சிப்பிக்குள்
ஒரு பெரிய முத்து” என்றேன், உரக்க;
மகிழ்ச்சியின் உச்சியில் மனம் பூரித்த அப்பா,
மறுகணமே, ”ஆனால் அது சப்பட்டை”
என்ற என் குரல்கேட்டு
ஓங்கி என் மண்டையில் ஒரு குட்டையும்
வெறுப்பையும் தன் வேதனையும்
கொட்டினாரோ?
தந்தையே என்னை மன்னியுங்கள்
நாம் கண்ட உண்மை
அப்படித்தானே இருக்கிறது இன்றும்?
கவலைப்படாதீர்கள் தந்தையே
உங்கள் தயரத்தின்முன்
என் வலி ஒன்றும் பெரிதில்லை.
எல்லா உயிரினங்களுக்கும்
வழி தெரிந்திருக்கிறது.
இப்போது எனக்கும்.
நீருக்குள்ளிருந்து
மேலெழுந்த நிலா
தன் வழி வீசிக் காட்டி நின்றது
நீர்மேல்.
அவ்வளவுதான்! என
மகிழ்ந்து சிரித்தது,
நீருக்குள் குதித்து நின்ற
என்னில் மெய்சிலிர்த்த நிலா
பாதையென்று எதுவுமில்லை;
காண்பதுவே வழி என்றது
பெரு வெளியொன்றில் முழுநிலா,
காண்பான் கண்களின் ஆழத்தில் ஒளிர்ந்தபடி,
கண்ணீர் நனைந்த கன்னங்களை முத்தமிட்டபடி.
இனியொரு குன்றிமணியளவு
கூடுதல் துயரும்
என்னைக் கொன்றுவிடும் என்றே
நடுநடுங்கிக் கொண்டிருந்தேன்.
பெருநலம் நாடி
இயற்கையின் பேரெழிலிலிருந்து
வந்து தழுவும் காற்றும்
தோற்கத் தகுமோ?
வீடு வந்து
இரவு உணவு வேளை
ஒரு மாம்பழத் துண்டின்
தீஞ்சுவைத் தீண்டலில்
கண்ணீர் பொங்குகிறது
தீராத ஓர்
அன்பை எண்ணி.
அகம் சார்ந்த
எப்பிரச்னைகளும் இல்லாதிருத்தல்;
ஆகவே
முழு எச்சரிக்கையுடனான
இடையறா ஓர் இயக்கப் பார்வையுடன்
எளிமை எனும் சொல்லுக்கும் இடமிலாது
எளிமையோடிருத்தல்.
தன் பெயருக்கும் முகவரிக்கும் மேல்
இன்னார் எனும் அடையாளமற்றிருத்தல்
திட்டமிடாமலேயே
உலகத் தீமைகளெதற்கும்
இடங் கொடாதமைதல்;
காதலில்
ஆகப் பெரும் அளவையும்
நுகர்ந்து தள்ளுதலில்
ஆகக் குறைந்த அளவையும் கொண்டு
உயிர் வாழ்தலிலேயே சுகம் காணதல்;
எல்லா உயிர்களையும் போல
இயற்கையோடியைந்து வாழ்தல்;
பெருங்கருணையும் பேரறிவுமான
உணர்வுகளில்
எவ்வுயிரைக் காட்டிலும்
செந்தண்மை கொண்டுவிடும்
தீரம் ஏற்று அமைதல்
தன்னிலும்
தாழ்நிலையிலுள்ளவர்கள் மீது கொள்ளும்
இரக்கம் என்பதா?
தான் என்பதே இல்லாதவர்களை
ஆட்கொண்டிருக்கும்
அருள் என்பதா?
பாதையையும் பயணத்தையும்
அறிந்து கொண்டோரிடம் ஒளிரும்
பேருணர்வென்பதா?
சுட்டி மறையும் மின்னொளியாய்
ஒருவன் கொள்ளும்
போய்வரல்தான் என்பதா?
மெய்யான
துயர்களையெல்லாம் அறிந்துகொண்ட
கண்ணீர் என்பதா?
மெய்யிருப்பின் எதிர்கொள்ளல் என்பதா?
அன்பினால் நாளும்
நம் நெஞ்சு கொள்ளும்
வேதனை என்பதா?
அமைதி என்பதா?
வாசகா,
என்னொத்த இதயமே,
பேரளவினதாம் ஒன்று
அரிதினும் அரிதாகிப் போனதின்
பொற் சோர்வையோ, பரிவின்
கையறு நிலையினைத் தாமோ
நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
இப்போது?
பேரியற்கை எதிரொலிக்கும்
பாதையில் நடப்போன் மாத்ரமே
போய்ச் சேருமிடமன்றோ அது!
அங்கே விளைந்துவிடும்
தனிமையினை ஆற்றுதற்கு
இயற்கையன்றி மனித உறவு
இல்லாமற் போய்விடுமோ?
உள்ளம் துள்ளும் களிநடனம்
தன் சம மக்களோடுதானே
அது சாத்தியம்?
தன் போல் ஒரு மனிதனையும் காணாத
தனியனுக் கில்லையாமோ மனித உறவின்பம்?
அவன் பரிதவிப்பைக் கண்டிரங்கியோ
மனிதர்களைப் படைக்கத்
துடித்துக்கொண்டிருக்கிறது
பேரியற்கை
நன்றாய் நான் என்னைப்
பிணைத்துக் கொண்டேன்,
நாவினால் மதுரைக்கு
வழிபகர்ந்து கொண்டிருக்கையில்
வழிகளினால் வாழ்வுக்கு
வழி சொல்லிக் கொண்டிருந்தவளோடு.
எத்து்ணை நிம்மதி!
இன்று தனிச் சிறப்பான
எந்த ஒரு செயலையும்
செய்யவில்லை.
கடல் நோக்கி நடந்துகொண்டிருந்ததில்
நீயும் நானும்
ஒத்த நண்பர்களாகி விட்டோமோ?
உன் உயிரசைவு தந்த மகிழ்ச்சியன்றோ
காதல் கொளளச் செய்தது
உன்மீது என்னை!
நான் உன்னைத் தொட நினைக்கையில்
நீ கொள்ளும்
அச்சம் என்னைத்
துன்புறுத்துவதை அறியாயோ?
இல்லை, சும்மா ஒரு வேடிக்கைவிளையாட்டு
என்றால் நன்று.
உயிர் ஜடமாகும் நாடகத்தைக் காட்டும் நீ
ஜடம் உயிர் கொள்ளும் இரகசியத்தைக் காணுதற்கோ
கடல்நோக்கிச் செல்லுகின்றாய்?
ஜடத்திற்குள் உயிரடங்கி நிற்றலையும்
ஜடத்தை உயிர் இழுத்துச் செல்வதையும்
உயிரும் ஜடமும் ஒன்றாகி நின்றதையும்
காணும் நான்
உன்னைக் கண்டவனில்லையே தோழா!
பெரும் பாரம் ஒன்றின் கீழ்
நசுக்குண்டவன் போல் காணும் உனைக் கண்டு
அப்போது நான் அழுதேன்:
இந்தச் சுமையினை
உன் முதுகோடு பொருத்திவிட்டது யார்?
இந்தப் பரிசுகளையெல்லாம்
நான் பெறுவதற்கு முன்னே
வாழ்வையே ஒரு பரிசாகப்
பெற்றிருந்தேனே!
பரிசு தொலைத்தவன் மீதுற்ற
கருணையே!
பரிசுபெறும்
தகுதியினை வரையறுப்போனே!
பேரிழப்பே!
பெருந் துயரே!
ஆறுதலே!
வானில் பறவை சென்ற தடத்தையும்
நீரில் மீன் நீந்திய பாதையையும்
மண்ணில் ஞானி நடந்த சுவட்டையும்?
அறையும் எளிமையின்
அற்புத இயக்கம் கண்டோ
வியந்து நெஞ்சுருகி
நெகிழ்ந்து நிற்கின்றன யாவும்?
பிறந்த சிசுவின்
கைப்பிடியளவான ஓர் இதயம்
உணர் கொம்புகளுடனும்
அற்பமான தற்காப்புடனும்
அச்சமின்றி
மேற்கொண்டுள்ள பயணமும்தான்
இடைநின்றதென்ன?
என் விழிவிரிவியப்பே
நின் நத்தை உருவமும்
நின் விழிவிரிவியப்பே
நானும் என் இயற்கைவெளி உடலுமாய்
நான் ஒருவரையொருவர் கண்டுநிற்கும்
இவ்வேளைதாமோ, காலம் காலமாய்
ஒருவரை ஒருவர்
ஆக்கிக் கொண்டுவரும் வேளையும்?
உயிர் வாழ்வின் நறுமணம் போற் பரவி
எங்கும் ஆழ் அமைதியாய் ஒளிரும்
பேரின்பமும்?
பூர்வீகம்
சொர்க்கம்.
என்றாலும்
பிறந்து வளர்ந்ததெல்லாம்
இங்கேதான்.
அவ்வப்போது அவ்விடம்
போய் வருவதுண்டு என்றாலும்
நமக்கு வாழக் கொடுத்துவைத்திருப்பது
இந்த நரகம்தானே அய்யா.
இந்த நரகக் குழிக்குள்ளும்
பூர்வீக வாசனைதான்
நம்மைக் காப்பாற்றிவருகிறது
என்றறிந்தோமானால்
சும்மாவிருக்க இயலுமோ அய்யா.
காதலேயான பெண்போலவும்
களங்கமின்மையேயான குழந்தைபோலவும்
வண்ணங்களும் ஒத்திசைவுமேயான
இயற்கையைப் போலவும்
இருள் கண்ட இடமெல்லாம்
விழிக்கும் ஒளி போலவும்
முரண்கண்ட இடமெல்லாம்
தோன்றும் துயர் போலவும்
கவிதை என்பது
காதலின் பாடல்.
கொஞ்சும் அதன் கற்பனைகளோ
துன்ப வேளையிலும்
உடன்வரும் விளையாட்டுத் தோழன்.
தனிமையைக் கலைத்து
உயிர்வாழ்வைக் கொண்டாடும்
மானுடக் குழந்தைகள் இருவர்.
நீயும் நானும்.
காமத்தைக் கரைத்தழித்து
இவ்வுலகைப் புரந்தருள எழுந்த
அழகுச் செயல்பாடோ,
பெண்ணே
உன் வடிவழகும்
உன் அணிமணிகளின் கலையும்
ஆழங்காண முடியாத நின் பார்வையும்?
வாயாடி ஒருவன் –
முனிப்பேய் அறைய
ஊமையாகிவி்ட்டதும்;
பேசும் விழிப் பேரழகியான
ஊமைப் பெண் ஒருத்தியின்
காதல் அவனைத் தொட்டதும்
பூர்வ கதை.
நாளும் தவறாது
விழிகளாற் பேசி
சைகைகளாற் குறிப்புணர்த்தி
எவர் கண்களுக்கும் தெரியாதபடித்
தேர்ந்த தனியிடச்
சந்திப்புகளுக்கு அழைத்து
நெடியதொரு முத்தத்தால்
இமைக் கதவுகளை இறுகமூடி
வாழ்வின்பம் துய்க்கக்
கட்டித் தழுவுபவள்;
கொண்ட காதலும்; அவனைக்
கண்ட நிறைவும்
கரைந்தழியாது நிற்க
அவள் ஈர விழிகளின்
இறைஞ்சற் பார்வையில் மாத்திரம்
வற்றாத கருணையின்
தீராத் துயரம்.
மவுனமான
இந்த அழுகையின் காரணம்
என்ன என்று தேடுகையில்
மனிதர்கள் நீங்கலான
மழலை உயிரினங்கள்
எதுவும் இதற்குக் காரணமில்லை
என அறிந்தேன்.
துயரையும்
துயரின் சங்கிலித்தொடர்ப் பயணத்தையும்
கண்டடைந்த அதிர்ச்சியோ காரணம்
என்று காண்கையில்
நீ வந்தாய்
காண்கையிலெல்லாம் முகிழ்க்கும்
கண்ணீரின் பூர்ணிமையுடன்.
வந்து விழும் அறியாப் பொருள்களினை
நான் இங்கிருந்தே
உணரும்படிக் காட்டுகிறது,
காற்றும் ஒளியும் ஊடுறுவக் கூடிய
இரும்புக் கதவில்
நான் கட்டித் தொங்கவிட்டிருந்த பை.
பசியறியாப் பொழுதின்
பால்மணம் மாறாக் குழந்தையாய்
துயின்று கொண்டோ, அல்லது
காற்றில் உப்பிய களிப்பில்
ஊஞ்சலாடிக் கொண்டோ
இருக்கும் அது,
வந்துவிழும் பொருள்களினால்
ஒளியும் காற்றும் மிரள
கனம் பெற்று எய்துகிறது
அமைதியும் நிச்சலனமும்.
கேளிக்கை ஆயிரமும்
சுவைகள் கோடியுமான
தன் படைப்புச் செயல்களையெல்லாம்
விட்டோடிய
பின்னோட்டமும்
ஸ்தம்பித்துநின்ற வேளைதானோ
பளாரென்று
முழுநிலவாய்ப் பூத்து நின்றது
அந்த ஒளி?
மண்டியிடவைக்காத
கண்ட்டைதல்.
வாய் அடக்கிய பெரு மவுனம்
உளறல்களால் தீண்டமுடியாத
பேரிசை
எப்போதும் தன் பாதுகாப்பிற்காய்
தன் முடிவைத்
தன் மடியிலேயே வைத்துக்கொண்டிருக்கும்
தொடக்கம்.
மாவீரன் போல் பேரரசன் போல்
தலையையும் தண்டு எலும்பையும்
காக்கும் தலைப்பாகை அணிந்து
எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே?
எந் நோய் செய்தது,
வெயில் கொல்லும் என்பிலதன் போலும்
இப் பலகீனம்?
அவன் உற்றுக் கவனிக்கத் தொடங்கவும்
எல்லாமும் –
பயங்கரக் குற்றங்கள்
அருவருக்கத் தக்கவை எனக்
கருதப்படுபவைகளும் கூட –
கபடத்துடன்
கைகட்டி வாய் பொத்தி
என்னை என்னை என
அவனைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டன.
எந்த ஒரு ஒலி நடுவிலும்
கலந்து விடாமையால்
ஓடோடி வந்து உவந்து
அவனைக் கட்டிக்கொண்ட மவுனம்
அவனைப் பிரபலமற்றவனாக்கும்
பாதையில் கைப்பிடித்து
நடத்திக்கொண்டிருந்தது
தன் இலட்சிய உலகை நோக்கி.
பிரபல உலகம் அவனைப்
பொறாமையுடன் அசூயையுடன்
தாழ்வுச் சிக்கலால்
தாக்குண்ட வன்மத்துடன்
அவனைக் கொன்றோ
தூக்கி வைத்தோ
தன் பெருமையினை நாட்டியே
தீர்வ தென்ற தீரா அகந்தையுடன்
மாறாத கபடத்துடன்
அவனைப் பிடித்திழுக்கப் பின்தொடர்ந்தது.
கணமும் அவனைப் பிரியாது
சூழ்ந்து நிற்கும் மவுன வட்டம்
புன்னகைத்தது,
பிறப்பு இறப்பு இல்லாதவனை
உலகம்
ஒன்றும் செய்ய இயலாததைக் கண்டு!
அதனால் செய்ய முடிந்த்தெல்லாம்
அவன் பிம்பத்தைச்
சிதைத்துக் களித்ததன்றி வேறென்ன?
துன்புற்ற அவன் பிம்பமோ
மனிதர்களைக் கண்டு அஞ்சித்
தலை தெறிக்க ஓடியது,
பிரபலமற்ற இயற்கையின் மடியில்போய்
அமைதித் துயிலும்
அறாத விழிப்பும்
விழிப்பின் துயரும்
அழியாத சொற்களுமாய்
ஆழ்ந்திருக்கும் அவனோடு
தானும் போய்ச் சேர்ந்துகொள்ள.
எதைக் கண்டு நொந்து அங்கே
நின்று விட்டாய் நீ?
எளிய மனிதர்கள் எவரும்
இதற்குக் காரணமில்லை எனும்
உண்மையின் ஒளியில்
இனியாவது நம் வாழ்வை
நாம் இயற்றிக் கொள்ளலாகாதா?
கடுங் கேடையின் நடுவில் தானன்றோ
காலங் காலமாய் வசந்தம்
தன் எழில் பேணிக் காத்துக்கொண்டிருக்கிறாள்?
இருளில் அமர்ந்து கொண்டு
எதையும் வாசிக்க முடியாது.
ஒளி?
கண்முன்னுள்ள இருளைக்
கண்டு கொள்வதிலன்றோ
தொடங்குகிறது அது?
ஓடும் ரயில் வண்டியின்
ஆபத்துச் சங்கிலி இழுத்து
அகப்பட்டு அடி வாங்கிய
பைத்தியத்தின் வேதனையோ
கண்களிற் பொங்கிக்
காட்சிகளையெல்லாம் மறைக்கும்
இந்தத் துயர்?
ஜன்னலுக்கு வெளியே
தாவும் வெறிகொண்டு
உடல் சிதறிப் போகாமல்,
ஏதாவ தொரு நிலையம் வரட்டுமே என்றும்
காத்திருக்காமல்,
எவர் தயவும் எப்பயமும் இல்லாத
அக் கணமே புகுந்துவிட்ட பின்னும்
தீராத்தேன் இந்தத் துயர்?
மனிதர்கள் ஒருவருக்கெதிராய் ஒருவர்
தமக்குள் விஷமேற்றிக் கொண்ட மடமைகளால்
எப்போதும் ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கும்
விஷக் கணைகளின்
விளைவுகளினின்றும் தப்ப முடியாமை
கண்ட விழிப்பும் வேதனையுமோ இது?
விஷத்தின் ஊற்றுக் கண்களையெல்லாம்
அடைக்கவும், அமுதின் ஊற்றுக் கண்கள் எல்லாம்
திறந்து கொள்ள; பிறப்பு இறப்பு இல்லாப்
பெருவாழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும்
மனிதனானாலும் சரி,
இதோ இக்கணம்
மலைபோல
அவன் கண்முன் நிற்கும் – மெய்மை –
மாளாத் துயர் – இதுவோ?
அவன் அசையாது நின்று
பார்த்துக்கொண்டிருந்தான்,
கண்முன்னே
உக்கிரமாய் குறுக்கிட்டோடிக் கொண்டிருக்கும்
ரயில் வண்டியினை.
அறியாமையாலும் சுரணையின்மையாலும்
தன்னை மறைப்பவர்கள் மீதும் இரங்கி
துயரார்ந்த விழிகளுடன்
அந்த நான்கு சுவர்களுக்குள்ளும்
வந்து நிற்கும் மெய்மை.
வீழ்த்த முடியாத
உறுதியான கால்களும் உடலுமுடைய
ஒரு மவுனம்.
உயிரோ பிணமோ குறைப்பிறவியோ –
பேதமின்றி ஏற்கத் தயாராய்
மலர்ந்திருக்கும்
தூ மலர்ப் படுகை.
உயிரின் உன்னதத்தின்முன்
தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
உன்னதத்தின் பணிவிடை.
நம் பாடுகளையெல்லாம் செவிமடுத்து
அழுகிச் சீழ்வைத்து விடாது
காயங்களாற்றி
தட்டி அரவணைத்து
ஓய்வு கொள்ளச் செய்யும் தாய்மை.
பிறப்பு இறப்பு அறுத்து
உலகைத் தாங்கிக்கொண்டிருக்கும்
பேருயிர்களின்
அணையா விழிப்பு.
அமைதியான கட்டில் –
அதில்
அமைதியின்றிப் புரண்டுகொண்டிருக்கும்
குறைப் பிறவி.
ஒரு சிறு தாவரம் அது.
அதன் இலைகள் இரண்டொன்று
அதன் கீழ் சருகாகிக் கிடந்தாலும்
அதன் கிளைகளிலே ஒன்றிரண்டு
உதிர்நிலையில் இருந்தாலும்
அதன் கொழுந்துகளில் ஒரு பக்கம்
பூச்சி அரித்து நின்றாலும்
அதனிடம் தான் எத்தனை எக்காளம்
வாய்ச் சவடால்
அவனைப் பார்த்து
இளக்காரமாய்ச் சிரிப்பது போலும்
எத்தனை கெந்தளிப்பு!
இருக்காதா பின்னே
தன் சாதி அந்தஸ்தில் தொடங்கி
இந்த முழு பூமியையுமே
தன்னுலகாக்கிக் கொண்ட
எத்தனை செல்வங்கள்!
எத்தனை சொந்தங்கள்!
அஞ்சியும் அஞ்சாமலும்
தயங்கி ஒடுங்கியவன்போற் செல்லும்
அந்த மனிதனோ
தன் பின்புலங்கள் எதையுமே
பேணாது அழித்துவிட்ட தனியன்.
அத் தாவரம் அவனிடம் கொக்கரிக்கும் போதெல்லாம்
அய்ம்பூதங்களையும் அதிரவைக்கும்
ஒரு வெற்றுக் கணம் கொண்டு
அதைத் தொட்டு உலுக்கிவிட
அவனது பின்புலமற்ற பின்புலமும்
உக்கிரமாய் எழுந்து எரிந்து
அழிந்து கொள்கிறது.
ஒரு பயனுமின்றி
அந்தத் தாவரத்தை நீங்கி
அவன் அமர்ந்திருக்கையிலெல்லாம்
அவனை ஆட்கொண்டு
மகிழ்கிற ஒரு பேருலகம்
அவன் மூலம் பேசத் துடிக்கையில்
அவனும் கவனித்துக் கேட்க வேண்டியதாயிற்று
அவனைச் சுற்றிய எளிய உயிர்கள், இயற்கை,
யாவும் அவனிடம் பேசத் துடிப்பதை.
அவன் பின் தலையிலும் முகத்திலுமாய்
ஒரு சேர ஒளி விழுந்திருக்கையில்தான்
எத்தனை அழகாய் வந்திருந்தது
அந்தப் புகைப்படம்!
அதன் முன்னரோ
அதன் பின்னரோ
எத்தனை புகைப்படங்கள்!
ஒவ்வொரு புகைப்டத்தையும்
அந்த முதல் தரப் புகைப்படக் கலைஞன்
உற்றுப் பார்க்கையில் எல்லாம்
நூறு முறை தேர்வு எழுதியும்
முழுமதிப்பெண் தவறித்
தோற்றுப் போனதை உணர்வதையே
அநத் முகம் காட்டிற்று.
ஒரு நூறு புகைப்படங்கள்!
இன்னும் எடுத்துத் தீரவில்லையா?
ஒளி முகத்தின் பல்கோணங்களையோ
எடுக்க வந்தான் அவன்?
இதழோரம் ஒட்டியிருக்கும்
எச்சிற் பருக்கையைப் போல
எளிதில் துடைத்துவிடக் கூடியதாக இல்லையா
அம் முகத்தின் தீவிரத்தோடு
தொங்கிக் கொண்டிருப்பதாய்க்
காணப்படும் வெறுப்பு?
இன்மையின் மாட்சிமைகள் தேடியோ;
தோன்றி மறைந்து தோன்றி மறைந்து
இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகின்
அழியா இருப்பினைக் காணவோ;
ஒருவிழியானவன்
கணந்தோறும் கணந்தோறும்
காணும் அவ்விறவாமையின்
எண்ணற்ற பேரெழில் சிலவற்றைக்
கையகப்படுத்திக் காட்டி ரசிக்கவோ;
அவன் தன் புகைப்படக் கருவியுடன்
ஓய்விலாது அலைந்து கொண்டிருக்கிறான்?
யாரைத்தான் மகிழ்விக்காது
துள்ளி, தன்மீது குதித்து நிற்கும் தீரனும்,
தன் சமநிலையை
எந் நிலையிலும் காக்கத் தெரிந்த
மேதையுமானவனை
ஏற்றிக்கொண்ட
அதன் பாய்ச்சல் பயணம்!
மீநலம் மிக்க மனிதனை மட்டுமே
ஏற்றிச் செல்லும் கறார் வாகனம்.
தரை விடுக்காமலேயே
சொர்க்கம் நோக்கித் தவழும் குழந்தை.
புல்லாங் குழல்போலும் எளிமை.
எத்தனைஅடிகள் வைத்தும்
எட்டாது துன்புற்ற மாந்தரெல்லாம்
மகிழ்ச்சி கொள்ளக் கிட்டிய அரும்பொருள்.
கால்கள் கண்டுபிடித்துக் கொண்ட
ஒற்றைச் சிறகு.
அல்ல;
அவனிரு கால்களையும் கைகளையுமே
சிறகாகப் பெற்றுக்கொண்ட பறவையுடல்.
இமைப்பொழுதும் சோராத விழிப்பு
தொட்ட கணமே உயிர்த்துவிடும் தயார்நிலை.
மேடு இறக்கிவிடும் வேகமெல்லாம்
மீண்டும் ஒரு மேட்டில் ஏறித்
தாழ்மையின்
பள்ளத்து வான்வெளியில்
இப்படி சற்றே பறந்து களிப்பதற்கா –
ஆகா! சிறகு தட்டி ஆர்ப்பரிக்கும் பறவைகள்
அவனைச் சுற்றிலும்
புதியதோர் நெருக்கம் பூண்டனவாய்.
தோண்டத் தோண்டப்
பெருகும் கிணறு
கற்கக் கற்க
உருகும் உள்ளம்
விரிய விரியப்
புரியும் கவிதை
பெருகப் பெருக
விடியும் உலகம்.
முற்றுமுழு உறுதியுடன் இதைச் சாற்றுகிறேன்:
இநதக் கப்பல் உடைந்து விடும்.
உயிர்பிழைக்கப் போராடுகையில்
உடைந்து போன அக்கப்பல் துண்டுகளில்
ஒன்றுகூட நமக்கு உதவாது.
ஏனென்று நான் சொல்லத் தேவையில்லை.
ஆனால் ஒரு துரும்பு...
நம்மை எண்ணி எண்ணி
காலமெல்லாம் நமக்காகவே
கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்த
ஒரு துரும்பு...
நம்மைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்த
அத் துரும்பைப் பற்றியவாறு
நாம் பிழைத்துகொள்ள விழையும்போது
நம் கைபட்ட மாத்திரத்தில்
அத் துரும்ப ஒரு படகாகும்.
தேவைப்பட்டால் ஒரு கப்பலுமாகும்.
உடையாது அக்கப்பல் ஒரு நாளும்.
உடைந்தாலும்
அதன் ஒவ்வொரு துண்டும் துரும்பும் கூ
ஒரு கப்பலாகும்.
புத்தகம் படிக்க
அவனுக்கு உதவிக்கொண்டிருந்த
மின் விளக்கை நோக்கி
வானளாவிய
தன் நன்றியைப்
பொழிந்துகொண்டிருந்தது
உச்சி முழுநிலா.
*
இல்லந் தோறும்
கவிந்து நிற்கும்
இருளினின்றும்
வெளியே வந்து பார்த்தால்!
உச்சி முழுநிலா!
ரகசியமற்று ஒளிரும் காதல்!
*
அன்று அவன் நிம்மதியாய்
தன் குடிலுக்குள் நுழைந்து
கட்டிலில் படுத்தான்,
கண நேரம்
முழு நிலவில்
நனைந்ததனால்.
*
துயின்று கொண்டிருக்கும்
மனிதர்கள்
ஒவ்வொருவர் நெஞ்சின்
அடி ஆழத்திலும்
புகுந்துவிடத்
தருணம் பார்த்துக்கொண்டிருந்தது
வீட்டுக் கூரைகளையே
உறுத்துப் பார்த்தவாறிருந்த
முழு நிலா.
*
இத்துணை
இதமான இருள்களை
உனையன்றி
வேறு யார் வழங்குவார்
முழு நிலவே?
*
ரகசியமற்றாற் போல் காண்கிற
வெளிவிரிந்த இக் காதலில்
ஒருவனால் மட்டுமே உணரக் கூடிய
இரகசியம் ஒன்றுண்டு.
கழற்றி, இருக்கை முதுகில்
தொங்கவிட்டிருந்த மேல் சட்டையை
- நிலவிய குளிர்மை நிறைந்துவிட –
எடுத்து அணிந்து கொண்டபோது
கண்டேன்; முழுநிலவின் முறுவலில்
முகிழ்த்திருந்த ஒரு நாணம்.
*
மனிதர்கள்தம்
மண்டைகளை
ஈர்க்கிறது,
ஓங்கி உரத்து
இடையறாது பொழியும்
வெள்ளத்தின் கீழ்
கணமும் மாசுறாத்
தூய் தளம்!
”இன்னுமொரு சந்தர்ப்பம்
இது நமக்கு” என –
ஒருநாள் விழிப்பில் நம்பிக்கை வைத்து
இதுநாள் வரைக்கும்
சோர்வுறாது
நம்மைக் கவனித்துக்கொண்டே
வந்துகொண்டிருந்த தெய்வமோ;
அவன் ஒரு புளுகுணி
அஞ்சாதே நீ
இதோ பார்
எக்கணமும் உனக்கொரு சந்தர்ப்பம்தான்
என ஒரு பெரும் பொழுதினைத்
தன் குரலால் திறந்து
சுட்டி நின்றது,
யாரது?
தெய்வத்தின் தெய்வமோ,
தீராத கருணையோ?
உலகத்து மனிதரையெல்லாம்
அக்கணமே அவசரமாய்
அழைத்து உரைத்துவிடும் வெறியோடும்
பேரொலியும் பேரளவும் பெருஞ்சக்தியுமாய்
நிலைநின்ற அமைதியோடும்
பொழிகிறது அருவி.
கணப் பொழுதும் மாசுறா
தளம் ஒன்றை நிறுவுதற்காய்
கானகமும் மலைமுகடுகளும்
கூடி ஆய்ந்து தீர்மானித்து
விரைந்து ஆற்றிய செயல்பாடு.
மனிதர்கள்
அத் தளம் போய் நின்று நின்று
தம் தலைகளைச் சிறு நேரம்
காட்டித் திரும்புவது,
ஈனச் சடங்காகவும்
தேகசுகக் களிப்பும்மட்டுமேயாகவும்
கதை முடிந்துவிடுவதைக் கண்ணுற்றோ
கலங்கிக் குரலெடுத்து
பேரோலமிடுகிறது அருவி?
பாறை ஒன்றின்
கானகத்
தனிமை மீதமர்ந்து
சுருண்டு
தன்னை
தன் நாவாலே நக்கித்
தூய்மை செய்துகொண்டிருந்த
ஒரு நாய்க்குட்டி என
குபுகுபு வென
ஒரு சின்னஞ் சிறிய
நீர்ச் சுனை.
நிச்சலனமான நீர் விரிப்பு
எல்லையற்ற துடிப்பினைத்
தன் சிறகுகளிலேந்திய வண்டு.
ஏற்பினால்
அம்மலரைச் சுற்றி
நீரில் நிகழ்ந்த ஒரு வட்டம்,
கதிரவனும் விண்மீன்கோடிகளும்
திகைக்க
இப் பிரபஞ்சம், தன்னையே
அதன் கழுத்தில் அணிவித்துக் கொண்ட
கோலம்,
ஆகுமோ, பெண்ணே
இப்போது
நான் உன் கழுத்தில்
அணிவித்துக் கொண்டிருக்கும்
மங்கல நாண்?
மனிதர்களை விடுதலை செய்வதற்காய்ப் பிறந்த
மகத்தான நூல்களை யெல்லாம்
படிக்கத் தொடங்கினவன், ஒருநாள்
முடித்துவிட்டான், அதுநாள்வரை எழுதப்பட்டதும்
தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருப்பதும்
இனி எழுதப்பட இருப்பதுமான
மேலான புத்தகங்கள் அனைத்தினதும்
மூலப் புத்தகம் ஒன்று கிட்டின உடனே.
நோகடிக்கிறோமோ நோகடிக்கிறோமோ என
நோகும் என்னுள்ளம் விரும்பியவாறே
ஒரு நாள்
இக் காற்று நடந்து செல்லும்
விதம் கண்டேன்
அன்றுதான் அது நிகழ்ந்தது:
காற்றோடு எனக்கு
அதுவரைக்குமில்லா நெருக்கம்!
ஒருநாள், அது வலுத்த புயலாகி
என் முகத்தில் கரிபூசிய போது தான்
என் பைத்தியமும் தெளிந்தது.
இப்போதும் அவன் என் நண்பன்தான்
அவனுக்கும்தான் தெரியாததா:
காட்டுக்குள் உலவும் யானையைப் போலும் கம்பீரம்;
காட்டுக்குள் மூட்டப் பெற்ற நெருப்பைப் போலும் கவனம்;
காட்டுக்குள் ஒளிரும் இரவும் நிலவும் அருவியும்
ஓடையும் குளிர்மையும் போலும் காதல்!
விண்ணும் நதியுமாய் விரிந்து கசிந்த
நிலக் காட்சி அகண்டமோ,
முழங்கால் அணைந்து சிரிக்கும் நீரில்
எருமை குளிப்பாட்டிக் கொண்டிருந்த
மூதாட்டியைப்
பாவாடை சட்டையணிந்த
சிறுமியாய்க் காட்டிற்று?
பிரக்ஞையில்லா மனிதர்களையும்
தேன் பாகில் திளைக்கும்
சிற்றெறும்புகளாய்க் காட்டிற்று?
மேக வெளியிடையே
கைவிடப்பட்ட நிலவோ,
போரிலும் பேராசையிலுமாய் உழலும் உலகை
இருள் நடுவே துயின்றுகொண்டிருக்கும்
குறைப் பிறவியாய்க் காட்டிற்று?
அப்படியானால்
உணரப்பட வேண்டியதை யெல்லாம்
உணர்ந்ததாலில்லையா,
ஒளியிலும் காற்றிலும் மகிழ்ந்தபடி
உயிர்வாழ்தலிலேயே இன்பம் காண்பதே
வழி என்றுணர்ந்தாலில்லையா,
வேட்டை வாழ்க்கையினைத்
தன் வாரிசுகளுக்குக் கைமாற்றிவிட்டு
உடல் தளர்ந்து ஓய்ந்த வாழ்வில்
வேறு வழியில்லை என்றுதானா,
அந்த மலர்த் தாவரம் –
அது சற்றே ஏமாந்து சோரும்படி
அதன் முன் வந்து நின்றார் அவர்?
விண் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள்?
தீண்டிச் சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்ற
மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்?
மலைகளும் பெரிது உவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால் தானோ
வற்றாத
நீரும் ஆங்க தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்?
வலி தரும் சந்திப்புகள்தாம்
இன்று நம் பிரச்னையோ?
ஆற்றொணாத வலியினை
ஆற்ற முனையும் பார்வைகள் தாமோ
இம் மலர்களும் விண்மீன்கோடிகளும்?
கண்ணெட்டும் பெருந்திறப்பு
எனினும்
காணமுடியாது போகும்
இத்தினியூண்டு மலர் ஒன்று.
எல்லையில்லா விண்ணை அது
அறிந்திருந்த்தாலோ
அத்துணை அழகு பொலிந்து
அமர்ந்திருந்தது அது?
மிளிரும் அப் பேரெழில்தான்
பெருந் துயர் கிளர்த்துவதென்ன?
தாய்மையும் தந்தைமையுமான
தேவம் தீண்டிய நோயோ?
உலகை நினைத்து அழும் இம் மலர்களை
உலகு கண்டு கொள்ளாததன் சோர்வோ?
மனிதன் ஒருவன்
கண்டவுடன் காணப்படுவது தானோ
இம் மலர்களின் பேரெழில் மலர்ச்சி?
ஒருநாளும் கலையாத
மலைமுகடுகளின் தியானம்;
ஓடிவரும் நதிகளினை
வாரி அணைக்கும் திரைகடலின்
பாறை உலராப் பேணல்;
நிலவு மேலெழும்பிப்
புவி நனையப்
பொழியும் ஒளி;
வண்ணமும் வாசமும் வடிவுமாய்
மலர்கள் மலர்ந்து மலர்ந்து
வெளிப்படுத்தும் காதல்;
கனியும் கிழங்கும் தானியங்களுமெனக்
குன்றாத செல்வக் கொடுப்பினைகள்.
திட்டமிட்டுக் காக்கப்படும்
தோட்டவெளிக்குள்
கொழு கொழுவென்று
செழித்து வளர்ந்து
பூரித்து நிற்கும்
தாவரங்கள்.
கானகத்தின்
ஒவ்வொரு இழைமீதும் பொழிந்து
அதன் எழிற் பசியாற்றிக் கொண்டிருக்கும் நிலா தான்,
உன் ஜன்னலருகே வந்து
உன்னை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கும் நிலாவும்.
உலகு நடத்த
உச்சி நின்று பொழிந்து கொண்டிருக்கும் நிலாதான்,
நீரள்ளி முகம் துலக்க வரும் உன்னை எதிர்நோக்கி
நீர்நிலை ஒவ்வொன்றிற்குள்ளும்
வெடவெடக்கும் குளிர்நடுக்கம் தாங்கியபடி
உயிர் காத்துக்கொண்டிருக்கும் நிலாவும்.
கடலின் அலைகளில்
சவாரி மகிழ்ந்துகொண்டிருக்கும் நிலாதான்,
உன் இருளிரவுக் கன்னக் கதுப்புகளின்
நீர் துடைக்க முன்னும் நிலாவும்.
காற்றில் மகிழ்ந்தபடி
தோட்டக் காடுகளைக்
காவல் காத்துக்கொண்டிருக்கும் நிலாதான்
உன் காதல் இரவின் களிப்பிற்காய்
மூடிய கதவின் முன்முற்றத்தில்
தாய்மை தந்தைமையுடன்
வெற்றிலை மென்றபடி
கால் நீட்டி அமர்ந்திருக்கும் நிலாவும்.
மண்துகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க
பாலையின் தனிமையினை
ஏகாந்தப் பெருவெளியாக்கிக் கொண்டிருந்த நிலாதான்,
கலகலக்கும் திருவிழாக் கூட்டத்தினையும்
நிலாச் சோறுண்ணும் குழந்தைகளையும் கண்டு
முறுவலித்துக் கொண்டிருக்கும் நிலாவும்.
மண்ணுயிரெல்லாம் குளிர
கமலை இறைத்துக் கொண்டிருந்த மாமனிதனைக்
கண்டு நின்றுவிட்ட நிலாதான்,
தன் செயலே கண்ணான அவன் முகம்
நேர் கண்டு மகிழக்
கிணற்றுக்குள் காட்சியளிக்கும் நிலாவும்.
விண்ணேறிப் பொழியும்
வட்டப் பெரு நிலவோ
கால வெளி கடந்து
காதலிசைக்கும் பறையோ
இந்த முழு பூமியின்
பிள்ளை நான் என்றது,
’பாருக்கு இடங்கொடாப் பாறை
உன் வேருக்கு நெக்கு விடும்’
இரகசியமென்ன
எனக் கேட்டதற்கு
மரம்.
காம்பில் ஒரு உந்தலையும்
காற்றில் ஒரு தாகத்தையும்
எதிர்நோக்கி
மாந்தளிர் வண்ண மொக்குகளுக்குள்
மலரத் துடிக்கும் மஞ்சள் பூக்கள்.
களிப்பூட்ட வீசும் மென்
காற்றையும்
காற்றிலாடும் கிளைகளையும்
காதலையும்
கண்டும்
வான் அமைதி
தொலைந்த தெங்கே?
வான் நிலவு வாட்டம்
வருடும் தென்னங் கீற்றும்.
அத்துணை பெரும்புனல் செல்வத்திற்குமாய்
சொந்தம் கொண்டாடுவதோ
கர்வம் கொள்வதோ
பூமாலை கேட்டு
ஊர்வலம் வருவதோ, இல்லை
மடை
ஆம் ஆம் அதுதான் அதுதான்
என இசைக்கும்
செங்கால் நடை அழகன்
மாபெரும் கலைஞன்
தூயோன்
தன் வெண்ணுடல்
கூர் அலகால்
ஒரே கொத்தலில்
கற்பித்து விடுகிறான்
பறத்தலின் இரகசியத்தை
எந்தச் சிற்றுயிர்க்கும்.
ஆறுதலாய்ச் சில சொற்கள்
விளம்ப முனைந்த குயிலின் குரலும்.
ஓங்கி உயர்ந்து வளர்ந்து மரித்த
உயிரற்ற கொம்பும் உதவுகிறது,
ஒல்லியான உயிர்மரக் கன்று ஒன்று
குனிந்து வளைந்து ஒடிந்து விடாதிருக்க.
புத்தகத்தை மூடி, எழுந்து
விளக்கணைக்கவும்
கணத் தாமதமுமின்றி
என் அருகே வந்தமர்ந்து
புன்னகைத்த
நிலவைக் கண்டு அதிர்ந்தேன்;
விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி
வானேறிக் கொண்டதும்
நான் கவனிக்கத் தவறியதும்
வேதனையாய் மனதிலாட.
வியப்பால்
தன் உடல் தாங்குமளவுக்கு
விரிந்த விழியாகி
தன் உடம்பையே
ஒரு விழிதாங்கியாக்கிக் கொண்ட
முண்டக் கண்ணன்.
தன்னைப் படைத்து
முன் செலுத்திக்கொண்டிருக்கும்
இயற்கையின் கட்டளைக்காய்
எக்கணமும் துடிப்பறாதிருக்கும்
இருப்புடையோன்.
எத்தனை தாவல்கள் தோற்பினும்
சோர்வுறாது
இம்முறை தன்னைத் தாங்கப்போவது
எதிர்த்து உதைக்கும் கரட்டுவெளி அல்ல,
தன் பூர்வீக சொர்க்கமே எனப்
பேசும் குருதியுடையோன்.
மழைக்குக் குலவையிடும் மண்நேசன்.
கல்லினுள்ளும் காத்திருக்கும் பெருந்தவத்தோன்.
இன்மையைத் தொட்டு மீட்டிச் சிலிர்த்தோடும்
ஆனந்தப் பளிங்குத் தெள்ளொளியோ?
காணும் பொழுதெல்லாம்
குனிந்து
கைப் பள்ளத்துள் அள்ளி
முகம் முத்தத் துடிக்கும்
அன்போ?
ஆரமுதோ?
தோன்றுமிடமும் மறையுமிடமும் தெரியாது
நிலைத்த்தொன்றும்
அதன்மேல்
நில்லாத தொன்றுமாய்ப் பாயும் நதியோ?
அழுக்குக் குறுக்கீடுகளாற்
கலங்கித் துன்புறும் நெஞ்சோ?
கண்ணீருடனேயே
நழுவி நனைத்து
கெஞ்சியும் மிஞ்சியும்
தேய்த்தும் துவைத்தும்
மாசுகளையும் அதே வேளையிலேயே
தன்னையும் தூய்மை செய்து கொள்ளும்
நீர்மையோ?
இடையறாத தன் ஓட்டத்தால்
மீண்டும் மீண்டும்
பளிங்குத் தெளிவெய்தி
சொல்லாற்றல்கள் துறந்து
காற்றிலும் ஒளியிலும் மகிழ்ந்தாடிக்
களிக்கும் பேருயிரோ?
தளிர் நுனிதோறும்
கதிர் கதிராய்ச் சிலிர்த்த
மலர் மொக்குகள் குலுங்கும்
கொன்றை மரத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப்
பூத்த மலர்கள்,
பின்வரும் பூவெள்ளத்தை அறிவிக்க என
ஆர்வமாய் முன்னோடி வந்து நிற்கும்
குழந்தைகள்!
ஒரு நண்பகல் ஓய்வு உறக்கத்தின்போது
காற்றின் படிக்கட்டுகளில்
ஓசை அஞ்சி வைக்கும் மெல்லடிகளுடன்
என் நாசியருகே வந்து
என்னைத் தொட்ட
மலரொன்றின் சுகந்தம் துய்த்தவனாய்
நான் விழித்தெழுந்து பார்க்கையில்
ஓராயிரம் சிரிக்கும் மலர்த்தேவதைகளில்
நான் அறியாதே என்னைத் தீண்டிய
ஒற்றை மலர் அவள் எங்குள்ளாள்
எனத் தேடினேன்.
எல்லோரிலும் தன்னைக் காணுக
என்பதுவோ
அவள் தன்னைக் காட்டி, பின்
மறைத்துக்கொண்டதன் இரகசியம்
என வியந்தேன்.
காணக் கிடைக்காமலோ
கண்டுகொள்ள இயலாமலோ போகும்
பிரிவின் வேதனையே
நம் துயர் என்பதறிந்தேன்.
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP