விசும்பில் ஒரு ஜெட் விமானம் விட்ட வடுவின்கீழ்...
அறையும் எளிமையின்
அற்புத இயக்கம் கண்டோ
வியந்து நெஞ்சுருகி
நெகிழ்ந்து நிற்கின்றன யாவும்?
பிறந்த சிசுவின்
கைப்பிடியளவான ஓர் இதயம்
உணர் கொம்புகளுடனும்
அற்பமான தற்காப்புடனும்
அச்சமின்றி
மேற்கொண்டுள்ள பயணமும்தான்
இடைநின்றதென்ன?
என் விழிவிரிவியப்பே
நின் நத்தை உருவமும்
நின் விழிவிரிவியப்பே
நானும் என் இயற்கைவெளி உடலுமாய்
நான் ஒருவரையொருவர் கண்டுநிற்கும்
இவ்வேளைதாமோ, காலம் காலமாய்
ஒருவரை ஒருவர்
ஆக்கிக் கொண்டுவரும் வேளையும்?
உயிர் வாழ்வின் நறுமணம் போற் பரவி
எங்கும் ஆழ் அமைதியாய் ஒளிரும்
பேரின்பமும்?