வாய்க்கால்
இன்மையைத் தொட்டு மீட்டிச் சிலிர்த்தோடும்
ஆனந்தப் பளிங்குத் தெள்ளொளியோ?
காணும் பொழுதெல்லாம்
குனிந்து
கைப் பள்ளத்துள் அள்ளி
முகம் முத்தத் துடிக்கும்
அன்போ?
ஆரமுதோ?
தோன்றுமிடமும் மறையுமிடமும் தெரியாது
நிலைத்த்தொன்றும்
அதன்மேல்
நில்லாத தொன்றுமாய்ப் பாயும் நதியோ?
அழுக்குக் குறுக்கீடுகளாற்
கலங்கித் துன்புறும் நெஞ்சோ?
கண்ணீருடனேயே
நழுவி நனைத்து
கெஞ்சியும் மிஞ்சியும்
தேய்த்தும் துவைத்தும்
மாசுகளையும் அதே வேளையிலேயே
தன்னையும் தூய்மை செய்து கொள்ளும்
நீர்மையோ?
இடையறாத தன் ஓட்டத்தால்
மீண்டும் மீண்டும்
பளிங்குத் தெளிவெய்தி
சொல்லாற்றல்கள் துறந்து
காற்றிலும் ஒளியிலும் மகிழ்ந்தாடிக்
களிக்கும் பேருயிரோ?