பேரோலம்
உலகத்து மனிதரையெல்லாம்
அக்கணமே அவசரமாய்
அழைத்து உரைத்துவிடும் வெறியோடும்
பேரொலியும் பேரளவும் பெருஞ்சக்தியுமாய்
நிலைநின்ற அமைதியோடும்
பொழிகிறது அருவி.
கணப் பொழுதும் மாசுறா
தளம் ஒன்றை நிறுவுதற்காய்
கானகமும் மலைமுகடுகளும்
கூடி ஆய்ந்து தீர்மானித்து
விரைந்து ஆற்றிய செயல்பாடு.
மனிதர்கள்
அத் தளம் போய் நின்று நின்று
தம் தலைகளைச் சிறு நேரம்
காட்டித் திரும்புவது,
ஈனச் சடங்காகவும்
தேகசுகக் களிப்பும்மட்டுமேயாகவும்
கதை முடிந்துவிடுவதைக் கண்ணுற்றோ
கலங்கிக் குரலெடுத்து
பேரோலமிடுகிறது அருவி?