கேண்மை
விண் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள்?
தீண்டிச் சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்ற
மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்?
மலைகளும் பெரிது உவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால் தானோ
வற்றாத
நீரும் ஆங்க தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்?