கனம்
வந்து விழும் அறியாப் பொருள்களினை
நான் இங்கிருந்தே
உணரும்படிக் காட்டுகிறது,
காற்றும் ஒளியும் ஊடுறுவக் கூடிய
இரும்புக் கதவில்
நான் கட்டித் தொங்கவிட்டிருந்த பை.
பசியறியாப் பொழுதின்
பால்மணம் மாறாக் குழந்தையாய்
துயின்று கொண்டோ, அல்லது
காற்றில் உப்பிய களிப்பில்
ஊஞ்சலாடிக் கொண்டோ
இருக்கும் அது,
வந்துவிழும் பொருள்களினால்
ஒளியும் காற்றும் மிரள
கனம் பெற்று எய்துகிறது
அமைதியும் நிச்சலனமும்.