அவன் உற்றுக் கவனிக்கத் தொடங்கவும்
அவன் உற்றுக் கவனிக்கத் தொடங்கவும்
எல்லாமும் –
பயங்கரக் குற்றங்கள்
அருவருக்கத் தக்கவை எனக்
கருதப்படுபவைகளும் கூட –
கபடத்துடன்
கைகட்டி வாய் பொத்தி
என்னை என்னை என
அவனைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டன.
எந்த ஒரு ஒலி நடுவிலும்
கலந்து விடாமையால்
ஓடோடி வந்து உவந்து
அவனைக் கட்டிக்கொண்ட மவுனம்
அவனைப் பிரபலமற்றவனாக்கும்
பாதையில் கைப்பிடித்து
நடத்திக்கொண்டிருந்தது
தன் இலட்சிய உலகை நோக்கி.
பிரபல உலகம் அவனைப்
பொறாமையுடன் அசூயையுடன்
தாழ்வுச் சிக்கலால்
தாக்குண்ட வன்மத்துடன்
அவனைக் கொன்றோ
தூக்கி வைத்தோ
தன் பெருமையினை நாட்டியே
தீர்வ தென்ற தீரா அகந்தையுடன்
மாறாத கபடத்துடன்
அவனைப் பிடித்திழுக்கப் பின்தொடர்ந்தது.
கணமும் அவனைப் பிரியாது
சூழ்ந்து நிற்கும் மவுன வட்டம்
புன்னகைத்தது,
பிறப்பு இறப்பு இல்லாதவனை
உலகம்
ஒன்றும் செய்ய இயலாததைக் கண்டு!
அதனால் செய்ய முடிந்த்தெல்லாம்
அவன் பிம்பத்தைச்
சிதைத்துக் களித்ததன்றி வேறென்ன?
துன்புற்ற அவன் பிம்பமோ
மனிதர்களைக் கண்டு அஞ்சித்
தலை தெறிக்க ஓடியது,
பிரபலமற்ற இயற்கையின் மடியில்போய்
அமைதித் துயிலும்
அறாத விழிப்பும்
விழிப்பின் துயரும்
அழியாத சொற்களுமாய்
ஆழ்ந்திருக்கும் அவனோடு
தானும் போய்ச் சேர்ந்துகொள்ள.