அறைக்குள் ஒரு கட்டில்
அறியாமையாலும் சுரணையின்மையாலும்
தன்னை மறைப்பவர்கள் மீதும் இரங்கி
துயரார்ந்த விழிகளுடன்
அந்த நான்கு சுவர்களுக்குள்ளும்
வந்து நிற்கும் மெய்மை.
வீழ்த்த முடியாத
உறுதியான கால்களும் உடலுமுடைய
ஒரு மவுனம்.
உயிரோ பிணமோ குறைப்பிறவியோ –
பேதமின்றி ஏற்கத் தயாராய்
மலர்ந்திருக்கும்
தூ மலர்ப் படுகை.
உயிரின் உன்னதத்தின்முன்
தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
உன்னதத்தின் பணிவிடை.
நம் பாடுகளையெல்லாம் செவிமடுத்து
அழுகிச் சீழ்வைத்து விடாது
காயங்களாற்றி
தட்டி அரவணைத்து
ஓய்வு கொள்ளச் செய்யும் தாய்மை.
பிறப்பு இறப்பு அறுத்து
உலகைத் தாங்கிக்கொண்டிருக்கும்
பேருயிர்களின்
அணையா விழிப்பு.
அமைதியான கட்டில் –
அதில்
அமைதியின்றிப் புரண்டுகொண்டிருக்கும்
குறைப் பிறவி.