ஸ்கேட் போர்ட்
யாரைத்தான் மகிழ்விக்காது
துள்ளி, தன்மீது குதித்து நிற்கும் தீரனும்,
தன் சமநிலையை
எந் நிலையிலும் காக்கத் தெரிந்த
மேதையுமானவனை
ஏற்றிக்கொண்ட
அதன் பாய்ச்சல் பயணம்!
மீநலம் மிக்க மனிதனை மட்டுமே
ஏற்றிச் செல்லும் கறார் வாகனம்.
தரை விடுக்காமலேயே
சொர்க்கம் நோக்கித் தவழும் குழந்தை.
புல்லாங் குழல்போலும் எளிமை.
எத்தனைஅடிகள் வைத்தும்
எட்டாது துன்புற்ற மாந்தரெல்லாம்
மகிழ்ச்சி கொள்ளக் கிட்டிய அரும்பொருள்.
கால்கள் கண்டுபிடித்துக் கொண்ட
ஒற்றைச் சிறகு.
அல்ல;
அவனிரு கால்களையும் கைகளையுமே
சிறகாகப் பெற்றுக்கொண்ட பறவையுடல்.
இமைப்பொழுதும் சோராத விழிப்பு
தொட்ட கணமே உயிர்த்துவிடும் தயார்நிலை.
மேடு இறக்கிவிடும் வேகமெல்லாம்
மீண்டும் ஒரு மேட்டில் ஏறித்
தாழ்மையின்
பள்ளத்து வான்வெளியில்
இப்படி சற்றே பறந்து களிப்பதற்கா –
ஆகா! சிறகு தட்டி ஆர்ப்பரிக்கும் பறவைகள்
அவனைச் சுற்றிலும்
புதியதோர் நெருக்கம் பூண்டனவாய்.