தவளை
வியப்பால்
தன் உடல் தாங்குமளவுக்கு
விரிந்த விழியாகி
தன் உடம்பையே
ஒரு விழிதாங்கியாக்கிக் கொண்ட
முண்டக் கண்ணன்.
தன்னைப் படைத்து
முன் செலுத்திக்கொண்டிருக்கும்
இயற்கையின் கட்டளைக்காய்
எக்கணமும் துடிப்பறாதிருக்கும்
இருப்புடையோன்.
எத்தனை தாவல்கள் தோற்பினும்
சோர்வுறாது
இம்முறை தன்னைத் தாங்கப்போவது
எதிர்த்து உதைக்கும் கரட்டுவெளி அல்ல,
தன் பூர்வீக சொர்க்கமே எனப்
பேசும் குருதியுடையோன்.
மழைக்குக் குலவையிடும் மண்நேசன்.
கல்லினுள்ளும் காத்திருக்கும் பெருந்தவத்தோன்.