பின்புலம்
ஒரு சிறு தாவரம் அது.
அதன் இலைகள் இரண்டொன்று
அதன் கீழ் சருகாகிக் கிடந்தாலும்
அதன் கிளைகளிலே ஒன்றிரண்டு
உதிர்நிலையில் இருந்தாலும்
அதன் கொழுந்துகளில் ஒரு பக்கம்
பூச்சி அரித்து நின்றாலும்
அதனிடம் தான் எத்தனை எக்காளம்
வாய்ச் சவடால்
அவனைப் பார்த்து
இளக்காரமாய்ச் சிரிப்பது போலும்
எத்தனை கெந்தளிப்பு!
இருக்காதா பின்னே
தன் சாதி அந்தஸ்தில் தொடங்கி
இந்த முழு பூமியையுமே
தன்னுலகாக்கிக் கொண்ட
எத்தனை செல்வங்கள்!
எத்தனை சொந்தங்கள்!
அஞ்சியும் அஞ்சாமலும்
தயங்கி ஒடுங்கியவன்போற் செல்லும்
அந்த மனிதனோ
தன் பின்புலங்கள் எதையுமே
பேணாது அழித்துவிட்ட தனியன்.
அத் தாவரம் அவனிடம் கொக்கரிக்கும் போதெல்லாம்
அய்ம்பூதங்களையும் அதிரவைக்கும்
ஒரு வெற்றுக் கணம் கொண்டு
அதைத் தொட்டு உலுக்கிவிட
அவனது பின்புலமற்ற பின்புலமும்
உக்கிரமாய் எழுந்து எரிந்து
அழிந்து கொள்கிறது.
ஒரு பயனுமின்றி
அந்தத் தாவரத்தை நீங்கி
அவன் அமர்ந்திருக்கையிலெல்லாம்
அவனை ஆட்கொண்டு
மகிழ்கிற ஒரு பேருலகம்
அவன் மூலம் பேசத் துடிக்கையில்
அவனும் கவனித்துக் கேட்க வேண்டியதாயிற்று
அவனைச் சுற்றிய எளிய உயிர்கள், இயற்கை,
யாவும் அவனிடம் பேசத் துடிப்பதை.