தப்பமுடியாமை
ஓடும் ரயில் வண்டியின்
ஆபத்துச் சங்கிலி இழுத்து
அகப்பட்டு அடி வாங்கிய
பைத்தியத்தின் வேதனையோ
கண்களிற் பொங்கிக்
காட்சிகளையெல்லாம் மறைக்கும்
இந்தத் துயர்?
ஜன்னலுக்கு வெளியே
தாவும் வெறிகொண்டு
உடல் சிதறிப் போகாமல்,
ஏதாவ தொரு நிலையம் வரட்டுமே என்றும்
காத்திருக்காமல்,
எவர் தயவும் எப்பயமும் இல்லாத
அக் கணமே புகுந்துவிட்ட பின்னும்
தீராத்தேன் இந்தத் துயர்?
மனிதர்கள் ஒருவருக்கெதிராய் ஒருவர்
தமக்குள் விஷமேற்றிக் கொண்ட மடமைகளால்
எப்போதும் ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கும்
விஷக் கணைகளின்
விளைவுகளினின்றும் தப்ப முடியாமை
கண்ட விழிப்பும் வேதனையுமோ இது?
விஷத்தின் ஊற்றுக் கண்களையெல்லாம்
அடைக்கவும், அமுதின் ஊற்றுக் கண்கள் எல்லாம்
திறந்து கொள்ள; பிறப்பு இறப்பு இல்லாப்
பெருவாழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும்
மனிதனானாலும் சரி,
இதோ இக்கணம்
மலைபோல
அவன் கண்முன் நிற்கும் – மெய்மை –
மாளாத் துயர் – இதுவோ?
அவன் அசையாது நின்று
பார்த்துக்கொண்டிருந்தான்,
கண்முன்னே
உக்கிரமாய் குறுக்கிட்டோடிக் கொண்டிருக்கும்
ரயில் வண்டியினை.