ஒரு நூறு புகைப்படங்கள்
அவன் பின் தலையிலும் முகத்திலுமாய்
ஒரு சேர ஒளி விழுந்திருக்கையில்தான்
எத்தனை அழகாய் வந்திருந்தது
அந்தப் புகைப்படம்!
அதன் முன்னரோ
அதன் பின்னரோ
எத்தனை புகைப்படங்கள்!
ஒவ்வொரு புகைப்டத்தையும்
அந்த முதல் தரப் புகைப்படக் கலைஞன்
உற்றுப் பார்க்கையில் எல்லாம்
நூறு முறை தேர்வு எழுதியும்
முழுமதிப்பெண் தவறித்
தோற்றுப் போனதை உணர்வதையே
அநத் முகம் காட்டிற்று.
ஒரு நூறு புகைப்படங்கள்!
இன்னும் எடுத்துத் தீரவில்லையா?
ஒளி முகத்தின் பல்கோணங்களையோ
எடுக்க வந்தான் அவன்?
இதழோரம் ஒட்டியிருக்கும்
எச்சிற் பருக்கையைப் போல
எளிதில் துடைத்துவிடக் கூடியதாக இல்லையா
அம் முகத்தின் தீவிரத்தோடு
தொங்கிக் கொண்டிருப்பதாய்க்
காணப்படும் வெறுப்பு?
இன்மையின் மாட்சிமைகள் தேடியோ;
தோன்றி மறைந்து தோன்றி மறைந்து
இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகின்
அழியா இருப்பினைக் காணவோ;
ஒருவிழியானவன்
கணந்தோறும் கணந்தோறும்
காணும் அவ்விறவாமையின்
எண்ணற்ற பேரெழில் சிலவற்றைக்
கையகப்படுத்திக் காட்டி ரசிக்கவோ;
அவன் தன் புகைப்படக் கருவியுடன்
ஓய்விலாது அலைந்து கொண்டிருக்கிறான்?