பரிவு என்பது...
தன்னிலும்
தாழ்நிலையிலுள்ளவர்கள் மீது கொள்ளும்
இரக்கம் என்பதா?
தான் என்பதே இல்லாதவர்களை
ஆட்கொண்டிருக்கும்
அருள் என்பதா?
பாதையையும் பயணத்தையும்
அறிந்து கொண்டோரிடம் ஒளிரும்
பேருணர்வென்பதா?
சுட்டி மறையும் மின்னொளியாய்
ஒருவன் கொள்ளும்
போய்வரல்தான் என்பதா?
மெய்யான
துயர்களையெல்லாம் அறிந்துகொண்ட
கண்ணீர் என்பதா?
மெய்யிருப்பின் எதிர்கொள்ளல் என்பதா?
அன்பினால் நாளும்
நம் நெஞ்சு கொள்ளும்
வேதனை என்பதா?
அமைதி என்பதா?
வாசகா,
என்னொத்த இதயமே,
பேரளவினதாம் ஒன்று
அரிதினும் அரிதாகிப் போனதின்
பொற் சோர்வையோ, பரிவின்
கையறு நிலையினைத் தாமோ
நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
இப்போது?