ஆமையும் சுமையும்
கடல் நோக்கி நடந்துகொண்டிருந்ததில்
நீயும் நானும்
ஒத்த நண்பர்களாகி விட்டோமோ?
உன் உயிரசைவு தந்த மகிழ்ச்சியன்றோ
காதல் கொளளச் செய்தது
உன்மீது என்னை!
நான் உன்னைத் தொட நினைக்கையில்
நீ கொள்ளும்
அச்சம் என்னைத்
துன்புறுத்துவதை அறியாயோ?
இல்லை, சும்மா ஒரு வேடிக்கைவிளையாட்டு
என்றால் நன்று.
உயிர் ஜடமாகும் நாடகத்தைக் காட்டும் நீ
ஜடம் உயிர் கொள்ளும் இரகசியத்தைக் காணுதற்கோ
கடல்நோக்கிச் செல்லுகின்றாய்?
ஜடத்திற்குள் உயிரடங்கி நிற்றலையும்
ஜடத்தை உயிர் இழுத்துச் செல்வதையும்
உயிரும் ஜடமும் ஒன்றாகி நின்றதையும்
காணும் நான்
உன்னைக் கண்டவனில்லையே தோழா!
பெரும் பாரம் ஒன்றின் கீழ்
நசுக்குண்டவன் போல் காணும் உனைக் கண்டு
அப்போது நான் அழுதேன்:
இந்தச் சுமையினை
உன் முதுகோடு பொருத்திவிட்டது யார்?