பறவைகளின் கூட்டொலிகள்
கொடி உலர்த்தும் ஆடைகளோடும்
வண்ணப் பூந்தொட்டிகளோடும்
ஒளியைத் தவிர
வேறெதையுமே
தேக்கிவிடாத தளத்தோடும்
வானமே தவமெனக் கொண்டிருக்கும்
மொட்டை மாடியின் ஓர் மூலைக்குக்
குடைபிடிக்கிறது மரம்
பலத்த தயக்கத்துடனே.
எவர் தவத்தையும் கலைத்துவிடாமல்
கூர் தீட்டவந்த பணியாளர்களாய்
பறவைகளின் குரல்கள்.
இந்த அதிகாலை வேளையின்
ஆரம்ப ஒலிகளாய்
வலியுணர்த்துவதும்
வழி சுட்டும் சோர்விலா விழிப்பிற்கான
ஆற்றலைப் படைப்பதுமாய்
பறவைகளின் கூட்டொலிகள்!