இரு விழாக்களும் விலைமகளிர்களும்
ஆயிரம் ஒளி விளக்குகளுடன்
பிரகாசிக்கும் இரவுதான் என்ன!
வண்ண வண்ண
விளையாட்டுக் கருவிகளும்
வேடிக்கைப் பொருட்களும் சூழக்
குழந்தைகளும்,
அழகுப் பொருட் கடைகள் சூழ
அணிமணிகள் பூண்டுலவும் அணங்குகளும்
காதலும் கண்களுமாய் உலவும் தேவர்களுமாய்
விழாக் கோலம் பூண்ட கோயில்!
மானுடர் தாம்
அடைந்துவிட்ட இலட்சியத்தால்
பூரிட்டெழும் மகிழ்ச்சிபோலே
சாமக் கொடைக் கொண்டாட்டத்தை
உரத்து ஒலிக்கும் ஒலிபெருக்கி!
முழு உலகும் போல்
ஊரே ஓரிடம் கூடிக் குவிந்திருக்க
என்ன குறை என்ன குறை
சொல் மகனே எனக்
கேட்டதுவோ ஓர் அன்னைக் குரல்?
தூர
அழைத்துச் சென்று
யாவும்
தடையற்று உலவும்
அருட் பெருவெளியோ என
விரிந்த வானப் பந்தலின் கீழ்
நிலவும் விண்மீன்களும் போதாது
ஒளிரும் நம் குழல் விளக்குகளும்
உற்று உற்றுக் காட்ட
அறுவடை முடிந்த வயல் நடுவே
சட்டத்திற்கும் காவலுக்கும்
அகப்படாத எச்சரிக்கையுடன்
நிறுத்தியதோர் டிராக்டர் மேடையினை
முள் அரணும், கைத்தடிகள் ஏந்திய
முரடர்களும் காக்க,
கற்புலகும் பண்பாடும்
கூச்ச நாச்சமும் துறந்து
ஒலிக்கும் ஆபாசப் பாடல்களுக்கும்
தாளங்களுக்கும் கூச்சல்களுக்குமாய்
மெது மெதுவாய் ஒன்று ஒன்றாய்
அத்தனை ஆடைகளையும் களைந்து
காமத்திற்கே காம்மூட்டும்
வெறியாட்டு நடனமாடும்
விலை மகளிர்களும்
அந்த அன்னைதாமோ?
தெய்வம்தாமோ?
இரு விழா மேடைகளுமே
ஒன்றுக்கொன்று
தூரத்து ஒலியாகி
அமைதியற்றுத் திகழ்கின்ற பூமியையும்
தட்டி அணைத்துக் கொள்வதும்
அவர்கள் கருணைதாமோ?