எதிரேயிருந்தவள்
*’முகமே வாய் என
உதடுகள் நூறு விரித்து’த்
தாகித்து நிற்கும் தாமரைக்
குளத்தில்
வழிப்போக்கன் இறங்கி
இரண்டு வாய்
அள்ளிக் குடித்து நிமிர்கையில்
தான் பருகும் அக்கணத்தே
யாரோ தன்னைத்
தான் பருகியதாய்ப்
பிரமை தட்ட
எதிரே:
வெட்கத்தில் சிவந்து போய்
வானத்தில் முகம் புதைத்துப்
பார்த்தது தாமரைப் பூ
*பிரமிள்