கோபிகா மரங்கள்
மேலே தெரியும் சூரியன்
புடவை வியாபாரியாய்
உதறி வீசிக் காட்டுவான்
தன் வண்ணங்களை
கடல் நீலம் விம்மி அலைக்கும்;
பூமி மீது
கொக்கு பூத்த வயல்கள் சிலிர்க்கும்;
புரண்டு திரிந்து ஆட அழைக்கும்
பொன்மணல் காடு மின்னும்;
இருவர் மனமும்
கட்டிப் பிடித்தே கலந்து விடத் தவிக்கும்
அவஸ்தையை நீர் நிலையில்
காட்டிச் சிரிக்க,
திகைத்து
மரமாகிப் போயினர் கன்னியர்,
கதிரவனவன் கண்ணனாய்
இறங்கி வாராக் கானகத்தே!