அம்மணி அம்மணி என்று ஒரு பெண்
வேலைக்காரப் பெண் அவள்; அனாதை போல.
குடம் தூக்கி வீடுகளுக்குத்
தண்ணீர் எடுத்து ஊற்றக்கொண்டிருப்பாள்
கிணற்றடியில் அமர்ந்து
பாத்திரம் துலக்கிக்கொண்டிருப்பாள்
சாப்பாட்டுப் பாத்திரஙகள் அள்ளிச்
சுமந்துகொண்டு செல்வாள் ரோட்டில்
இரண்டு கைகளிலும் பைக்கட்டும் அதன்
சிறுவர்களும் பற்றிவர
அவர்கள் நடையினுக்கு
இசைந்து இசைந்தே தான்
இம் மென்னடை கற்றிருப்பாள்
கண்களில் எப்போதும்
காணும் ஓர் ஆழ்கடல் சோகம்
உச்சிப் பொழுதில் கணுக்கால் நீரில்
துணி துவைத்து வைத்துவிட்டு
இந் நதிக்குள்ளே இறங்கிப் போவாள்
அப்போது மாத்ரமே
அந்த ஒளியை கண்டிருக்கிறேன் அவள் முகத்தில்;
ஒரு அன்யோன்யமான
அந்தரங்கமான
உறவில் வெளிப்படும் வெளிச்சத்தை!