பறை
போதையூட்டித்
தாலாட்டித் தூங்க வைக்கவா
ஒவ்வொரு மேடையிலும்
சங்கீத மூர்த்த
சாந்த சொரூபப் பாவனையுடன்
கள்ளப் பின்னணியாயமர்ந்து
ரீங்கரித்துக் கொண்டிருக்கிறாய்
எனது நண்பனே?
விண்ணதிர
மானுடரனைவரையும்
உசுப்பி எழுப்பும்
இந்த உக்கிரப் பேரோசை
தன்னைக் கண்டு
தானே அதிர்ந்து நிற்க;
காணுமிடமெங்கும்
மெய்மை ஒளிர;
மேடைகள் கோபுரங்கள் அதிர்ந்து
விழுந்து நொறுங்க;
வானம் தன் நட்புப் புன்னகையுடன்
குனிந்து நோக்க;
எத்தகைய தடித் தனங்களுக்கும்
உறைக்க வேண்டுமென்ற
அதீத ஒலியுடன்
ஒலிக்கும் இப்பேரிசைக்கும்
செவியுறா செவிகளை நோக்கி
கனல் கொப்பளிக்கும் விழிகள்
காறி உமிழ;
உயிர்த்தெழுந்த உணர்வுகள்
நெஞ்சுலுக்க;
நெகிழத் தொடங்கும்
உன் இதயத்தை மறைத்தபடி
இன்னுமா பாவனை செய்துகொண்டிருக்கிறாய்
நண்பனே?
பொங்கிவரும் மலைச் சுனையாய்க்
குதித்தோடிவரும் குழந்தைகளை
நம் ஈன மதக் கல்வியால்
இடைமறிக்காது
அதிரும் புத்தம் புதுக்
குருதியுடன்
உயிரனைத்துடனும்
நேசமாய் அமர்ந்து
நம் அறியாமைகளாலும்
அதிகார, போக
இச்சைகளாலும்
செய்த பாவங்களை யெல்லாம் எண்ணி எண்ணிக்
குற்றவுணர்வுகளால் உருகிக்
கண்ணீர்மல்கக்
கரையும் உன் அழுகையே,
காலம் உறுமி உறுமி எழுப்பும்
என் பேரிசைக்குப் பின்னணியாக
என்று வருவாய் இவ்விடம்
எனது நண்பனே?