அக்கினிச் சட்டிகளும் ஆயிரம் கண்ணகிகளும்
தீவிழி காட்டும் பெண் தெய்வங்கள் நோக்கி
நடந்து நடந்து களைத்து
நம்பிக்கைகளைத் தூர எறிந்து
நோன்பிருந்து நொந்த உடலை
உறுதி எய்திய உன்மத்தம் பிடித்தாட்ட
வெறி கொண்டு
திசையதிரக் கொட்டும் மேளங்களைத்
துணைக்கழைத்துக் கொண்டு
தள்ளாடும் நடையினையே
உக்கிர நடனமாக்கி
தன்னுள் எரிந்த போன்சாய் நெருப்பை
மாறி மாறிக் கைகளில் ஏந்தியபடி
அச்சமூட்டும் நின் தோற்றம்
அசைத்துவிடும் இம் மனிதர்களை
என்றெண்ணியோ
ஆடுகிறாய் நீ பெண்ணே?
தேறாது செத்த அடிமைத்
தீமைகளிலேயே மூழ்கிக் கிடக்கும்
மானுடனைத்
’தெய்வம் நான்’ என
அறைந்து உலுக்கித்
தன் நிலைக்குத் கொண்டுவரவோ
ஆடுகின்றனை?
தெய்வம் பல பலச் சொல்லித்
தீயை வளர்த்திடும் சிறு
மூடர்க்கு உறைக்கவோ
அக்கினிச் சட்டியினை
ஏந்திக் கனன்றபடித்
’தெய்வம் நான்!’ ’தெய்வம் நான்!’
என்றறைகின்றனை?
உற்றம் சுற்றம் மஞ்சளித்து
குடம் குடமாய் ஊற்றும் நீரில்
அணையாது நின்றெரியும் சுடராய்
அக்கினிக் கவசம் ஏந்தித்
தகிக்கிறாய்!
வழிகாட்டும் பந்தமோ
வாழ்விக்க வந்த தாய்மையோ
மனித குலம் ஓர் குடும்பம்
எனும் மாட்சிமையோ
மண்டைக்குள் சுரக்காத
மூளைகள் அதிரவோ
திசைச் சுவர்கள் நெகிழ நெகிழ
முட்டி முட்டி
ஆடுகிறாய் பெண்ணே?
தீண்டுமின்பம் அறியாதானைத்
தீட்டுக் கண்டுபிடித்தவனைச்
சகல நோய்களையும் உண்டாக்கி
மருந்துக் கடை இயற்றிப் பிழைப்பவனை
தீண்டி, அவன் மடமைகளை யெல்லாம்
ஆரத் தழுவும் தன் அணைப்பாலேயே
நொறுக்கித் தகர்த்து;
தம்மைத் தாமே வழிபடும்
சடங்குகளையெல்லாம் நிறுத்தி
நீருக்குள் புகுந்து
மேகமாகிப் பொழியவோ
பெருகி மடை உடைத்து,
பேய்கள் ஆடும்
பாழ் மண்டபங்களை யெல்லாம்
தரை மட்டமாய்ப் போக்கி
உலகைக் கழுவிப் புதுக்கவோ,
தீயேந்தி
தெருவிலிறங்கித்
திசைகள் குலுங்க –
உன்னை உன் ஆட்டமே
உருக்குலைத்துத் துன்புறுத்தியும்
விலகாது விரும்பி விரும்பி
ஆடுகின்றனை?
பெண்ணைப்
பேயெனவும் அடிமை எனவும்
பகை எனவும் பண்ட மெனவும்
பிதற்றிய மூடமதை,
முறைத்து மிதித்துத் தள்ளிய
மூர்க்கத்தை
இன்றும் பேணுதற்கோ
அக்கினிச் சட்டி ஏந்தி
அபிநயிக்கின்றனை?
தோற்றுப் போன தந்தைமை நோக்கி
தாய்மைக்கு இருக்கை கேட்டோ
அக்கினிக் கொடி ஏந்தி
ஆர்ப்பரிக்கின்றனை?
உன் பிள்ளைகளைச்
சோணியாக்கும்
நோய்களினைச் சாம்பலாக்கி
பேருணர்வைச் சமைத்து ஊட்டும்
அடுப்பு நெருப்போ இவ்வக்கினி?
பேருணர்வின் நுண்வடிவாம்
நின் காதலால் கட்டப் பெற்ற இல்லத்தை
கல், இரும்பால் சிறை செய்து
போகக் கட்டிலாகவும்
பேராசைத் தொட்டிலாகவும்
சிறுமதியின்
பதுங்கு குழியாகவும்
ஆயுதக் கிடங்காகவும்
மாற்றி விட்ட ஆண்மனதைச்
சுட்டுப் பொசுக்கி
ஊதி உதறிவிடும்
புயலோ இவ்வக்கினி?
தாளாத தன் நெருப்பைத்
தாங்கிப் பிடித்தபடி
நடுக்கும் குளிரைத்
தன் கனலாலே வென்றபடி
வழியெல்லாம் நீர்த்தடங்களை
வாரி இறைத்தபடி
உலகுய்யும் மந்திரத்தை
தன் தரிசனத்தால் ஒலித்தபடி
ஆடும் வெறி கொண்டனையோ
பெண்ணே?
தந்தைமை ஆட்சி தோற்க
தம் மக்களுக்காய்
அறம் கேட்டு அறம் நிறுத்தப்
பொங்கிவரும் ஆவேசமும்
ஆன்றமைந்து நிற்கும் அடக்கமுமாய்
அக்கினிச் சட்டி ஏந்தி
தன்னை உருக்கி உருக்கித்
தகதகக்கும் பொன்னாகி
ஆடிவரும் தூய்மையோ
அறமோ ஆருயிரோ
கலையோ ஓவியமோ
காதலோ பிள்ளைமையோ?
மாளாப் பெருந்துயர்
அக்கினியைத் தாங்கியபடி
கெஞ்சும் கால்களுக்குப் பணியாது
உலகுய்யும் மரணம் நோக்கி
மலை ஏறிக்கொண்டிருக்கும்
மாளாக் கண்ணகிகளோ?