காணாத அவள்
அவிழ்த்துப் போட்ட சேலையாய்
பாறையில் படர்ந்த கொடிகள்!
காற்று பிடித்து
இழுத்துப் போட்ட சட்டையாய்
தரையில் பூத்த செடிகள்!
முகத்தில் பூச
உரைத்த மஞ்சளாய்
பாறையில் முழிக்கும் பூக்கள்!
குளிக்க முயன்று
தோற்ற நாக்காய்
நீண்டு கிடக்கும் நதி
திகைத்த வானம்
எல்லாம் சொல்லும்
ஏகாந்தமாய்க்
குளித்துக்கொண்டிருந்த ஒரு தேவதையை!
எங்கே...? யாரும்
காணவே இல்லாத
அவள் ஸௌந்தர்யத்தைக்
கண்டு ராவணனாய்க்
கவர்ந்து சென்ற புருஷன் யார்?