தீயும் ஒளியும்
காலம் காலமாய்
அணையாது
காத்துக் கொள்ளப்பட்டுவரும்
தீ ஒன்று
ஒளியாக இருக்க முடியாது.
ஏனெனில்
ஒளி -
அது
காலத் தொடர்புடை தன்று.
மட்டுமின்றி – மன்னிக்கவும் -
மிகுந்த துயரத்துடனே தான்
இதை ஒருவர் கூற முடியும்:
அது பேரழிவுகளின்
தீ மூலமாகவும் திகழ்வதாகிவிடும்.
ஆகவே
கவனமாக இருப்போமாக
எந்த ஒரு காபந்துகள் மீதும்!
பற்பல மதங்கள்
பற்பல பிரிவுகளுக்கு நடுவே
யாராக இருந்தபடி
நாம்
இன்ன இடம் சென்று
இன்ன கடவுளரை
இன்ன முறைப்படி
தீவிரமான அனுஷ்டானங்களுடன்
வரிந்து வணங்கி நிற்கிறோம்?
எதற்காக? ஏன்? –
கேள்விகட்கெல்லாம் பதில் வழங்கி
நம்மை ஆபத்துக்களினின்றும் காக்கும்
ஒளி –
அது
தேசத் தொடர்புடையதுமன்று.
ஆகவே எச்சரிக்கையோடிருப்போமாக!
நமது சூழல்கள்
நமக்குத் தந்த
பழக்க வழக்கங்கள்
பண்பாடுகள்
எல்லாம்
ஒளியாகித் திகழ்வனதாம்
என்பதில்லை
ஏனெனில்
ஒளி –
அது
எந்தத் தொடர்புடையதுமன்று
ஆகவே
முழு விழிப் போடிருப்போமாக!