மெய்யறிவில்லாத மூட செல்வந்தரோ நாம்?
ஒற்றையடிப் பாதையோ
வண்டித் தடமோ
தார்ச் சாலையோ –
பறவை பதறி விலகும், பாம்பும்
நமது வருகையிலா நேரம் பார்த்தே
கடந்து செல்ல நினைக்கும்
யாரும் குறுக்கிட அஞ்சும்
நமது சாலையில்
நமக்கு வழிவிட்டே
வாழும் எளிய உயிர்களால்தான்
நம் வாழ்க்கை அமைந்துளதெனும்
உணர்வில்லாத மனிதனை
என்னவென்று சொல்வது?
நாம் செல்லும் பாதையெங்கும்
வணக்கம் வணக்கம் என்று
பணிந்து நிற்கும் மனிதர்கள் கண்டு
ஒருவகை இன்பம்
துள்ளும் முன்
ஒரு கணம்
உணர்ந்ததுண்டா, அவர்கள் –
அருமை ஒன்றால் ஈர்க்கப்பட்டு
தோழமைத் தலைமையின் கீழ் ஒரு
சமயப் பணிக்காய் வந்தவர்களல்லர்;
வயிற்றுக்காய்
அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதை!
மேற்பக்கம் ஆள்பவர்களையும்
கீழ்ப்பக்கம் அடிமைகளையும்
இடவலப் பக்கங்களில் செல்வர்களையும்
நெருக்கி அண்டையமைத்து
தம்மையும் இம் மூ உலகையும்
அணை கட்டிக் காக்கத் தெரிந்த
புத்திசாலி – நம்மைப்
பார்த்துத்தான் சொன்னானோ இயேசுவும்
ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும்
செல்வந்தன் சொர்க்கத்துள் நுழைய முடியாதென்று.
எத்தனை காலம் மறைத்து வாழ்வோம், நண்பனே
நம் கையொன்றின் குறை விகாரத்தை?