சௌகரியமான அறை ஒன்றில்
தாகித்துத் திரும்பிப் பார்த்தேன். கைகால்
தலையைச் சீவி எறிந்துவிட்டு
முண்டத்தைக் குடைந்து செய்த-
அந்த இரத்தம் இன்னும் உலராத
ஈர நீர்ப் பானை
முகத்தை அரித்த உணர்வுகளைக்
கழுவத் திரும்பினேன்:
மெத்தப் பணிவுடன்
குனிந்து
தலை தாழ்த்தி
ஒரு பல் இளிப்புடன்
தயாராய் நீட்டி நின்றது
பேஸின், ஓர் ஆள் போல
நரகலில் புரண்டதுபோல்
உடம்பெல்லாம் கூசிக் குறுக
இருந்தபடியே
பாத்ரூமை நோக்கிச் சென்றது மனம்
ஷவரின் துளைகள் விரல்களாய் நீண்டு
பாய்ந்து என் உயிரைக் குடிக்க
வெறித்தது என்னை,
கனமான கனத்துடன் அழுத்திக்
கொன்றுவிட முயன்றது
என்னை, என் மூளைக்குள்
ஓர் ஓவர்ஹெட் டாங்க்
அவ்வறையை விட்டு
வந்தேன் சுதந்திரமான
காற்று என் முகத்தைக் கொஞ்ச
கண்ணுக்கு அவ்வறை
அறவே மறைந்துபோக; மறந்து போக
வந்து
குளித்துக்கொண்டிருந்தேன் இந்நதியில் அன்று.
அப்புறம் என்றும்,
உடம்பை உதிர்த்துக் கரையோரம் ஒதுக்கிவிட்டு