ஆப்பிள்காரன்
தலைச் சுமையாய் ஆப்பிள் விற்பவனின்
கூடை ஆப்பிள் ஒன்று
விலை போகாமல்
வீணே அழுகி விடுவேன் என்று
பயமுறுத்திச் சாதித்துக்கொண்டது
அவனிடம் தனது காதலை.
”ஓயாத தலைச் சுமைக்கிடையே
ஒரு சிறு இளைப்பாறலன்றோ உன் அன்பு!”
அவன் புலம்பினான்
”காதலால் நெய்யப்படாத என் வாழ்வில்
உன் காதல் தேன் துளியாய் இனித்து
பின், தன் போதாமையால் தோற்று
இறுதியாய்
இத் தலைச்சுமைதானே வென்று நிற்கிறது?”
குரல் கேட்டு
அவன் சுமை இறக்க
மலரும் ஒவ்வொரு இளைப்பாறலும்
முதிர்ந்தொருநாள் தன் முழுமையினை
எய்திடாதா?