அன்னத்தாயக்கா வீடு
தன் ஓய்வு ஒழிவெல்லாம்
தெரு வாசலிலேயே வந்து நிற்கிறாள்
அன்னத்தாயக்கா.
கல்யாணமாகி
அவள் இந்தத் தெருவுக்கு வந்து
ஆண்டு ஒன்றுதான் ஆகிறது
போவோர் வருவோரிடமெல்லாம்
அப்படி ஒரு உறவு
எப்படி வந்ததோ அக்காவுக்கு!
பூவே என நிற்பவளை
பூக்காரக்கா வந்து பிடித்துக்கொள்ள
பேசுகிறார்கள் பேசுகிறார்கள்
பிரிய மனமில்லாதவர்களானாற்போல்
பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் ஒரு முழம் பூ
இன்பக் கடமைபோல் வாங்கிக் கொள்கிறாள், அக்கா.
தலைச் சுமையும் கூவலும்
தள்ளாத வயதின் தளர்நடையுமாய்
ஒரு முதியவர்
வாசலில் நிற்கும் அக்காவைப் பார்க்கிறார்.
எந்த ஊர் தாத்தா? என வினவி
அய்யோ அவ்வளவு தூரத்திலிருந்தா எனப் பரிந்தபடி
சுமையிறக்கி சற்றே இளைப்பாற இடம் கொடுத்தபடி
பத்து ரூபாய்க்குப் பண்டமும் வாங்கிக் கொள்கிறாள், அக்கா.
முரண்டி வளைந்து நெளியும்
மட்டமான ஊக்குகளும் பிறவும் விற்க
மாதத்திற்கொருமுறை வரும் பாத்திமாவிடம்
பிறவிதோறும் தொடர்ந்துவரும் உறவோ அக்காவுக்கு?
என்ன பிணக்கு! என்ன சல்லாபம்!
தன் வீதி வழி போகும் முதியவர் பெண்டிர்
ஏழை எளியவர் குழந்தைகள்
அத்தனை பேர் பெயரும் கதைகளும் அவள் அறிவாள்
போலவே அத்தனை பேரும் அவளை அறிவரோ?
மனிதர்களைவிடவும் தாங்கள்தாம்
அவளை நன்கறிந்தவர்கள் போலும்
பீடுடனே மகிழ்ந்து மகிழ்ந்து
தலையாட்டிக் கொண்டிருக்கின்றன
அவளோடுதான் வந்து நின்றவைபோல
அவள் வீட்டைச் சுற்றிலும் மரங்கள்.