இன்பச் சிரிப்புகளும் பொம்மைகளும்
துயரமே உருவாய்க் காணும்
அவர் கரை தெரியுமா உங்களுக்கு?
அவரது இதயக் கனியே போல்
ஒரே ஒரு பெண்குழந்தைதான் அவருக்கு.
அக் குழந்தையின் கள்ளமற்ற சிரிப்பில்
தூண்டல் பெற்றவராய்
ஓராயிரம் ஆனந்தக் கவிதைகள்
எழுதிக் கொண்டிருந்தார் அவர்.
வீட்டை நிறைத்துவிட்டார்
அத் தெய்வம் விளையாடுவதற்கென
விதவிதமான பொம்மைகளால்.
பெண் என
அவள் முழு வளர்ச்சியடைந்த பின்னும்
அனுபவங்களாலாகும்
மூளை வளர்ச்சியடையாது
மாறாத இன்பச் சிரிப்பும்
பொம்மைகளோடாடும் விளையாட்டுமாய்
அவள் நின்று விட்டதைக் கண்டு
உடைந்து போய்விட்டாரோ அவர்?
அவள் நெஞ்சையெல்லாம் ஆட்கொண்டு
அவளை வஞ்சித்துக் கொண்டிருக்கிற
அப் பொம்மைகளை
அவள் முகம் வாடும்படி
எப்படிப் பிடுங்கி எறிய முடியும் அவரால்?
திருமணம் மருத்துவமாகலாமென
மணம் முடித்து வைத்த பின்னும்
தன் குழந்தைகளையும் கணவனையும்
பொம்மைகளாகவே கண்டு
அவர்கள் உயரைக்
குடித்துவிட்டு வந்து நிற்பவளைக் கண்டு
அவளது மாறாத இன்சிரிப்பைக் கண்டு
கோபங் கொள்ளவா,
வெறுக்கவா,
அழவா,
அவரால் என்ன செய்ய இருக்கிறது?