கோட்டைகளும் கொலைக் கருவிகளும்
துயர்நிலமாய்த் திரிந்த்தெப்படி,
உயிரின் ஆனந்தக் குழந்தைப் பருவம்
முடிவில்லாப் பெருவிரிவாக்கமாய்த்
திகழ விதிக்கப்பட்ட இப் பூமி?
தொடரின்ப நாட்டமோ, பயமோ,
தாம்-பிறர் எனும் பேதங்களூடே
பிறக்கும் பாரபட்ச விஷத் துளிர்களைக்
கண்டுகொள்ளாது விரையும் வேகமோ,
சுரணையின்மையோ, அன்பின்வழி
பெருகும் அறிவு இன்மையோ?
முதிர் இளமைப் பருவத்தில்
அணிந்துகொண்ட போர்ச் சீருடையோ,
தனக்குள்ளே பதுங்கியிருக்கும்
கோட்டைகளையும் கொலைக் கருவிகளையும்
காலை முதற் கடனாய்ச் சரிபார்த்துக் கூர்படுத்தியும்
அந்தி இறுதிக் கடனாய் அதன் குருதி கழுவித் துடைத்தும்
தயார் நிலை பேணிக்கொண்டிருக்கும்
நம் வாழ்வோ?