பேருந்து நிறுத்தமொன்றில்…
பேருந்து நிறுத்தமொன்றில்
வெகுநேரமாய் நின்றுகொண்டிருந்தாள்
ஒரு பெண்.
அக்கம் பக்கத்திலுள்ளோர்
சந்தேகக் கண்களும்
காமக் கண்களும் தொந்தரவு செய்ய
கலக்கமடைந்தாள்
அந்தப் பெண்.
ஒரு மனிதன் அவளை நெருங்கி
எங்கே போக, எந்த பஸ்ஸைத்
தேடுகிறீர்கள் அம்மணீ
என்கிறான்.
இல்லை; சொன்னபடி வரவேண்டிய
ஒரு ஆளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்கிறாள் அவள்.
இவ்வளவு காலம் வராதவன்
இனிமேலா வரப்போகிறான்?
அவனுக்குப் பதிலாய்
என்னை ஏற்றுக் கொள்ளக்கூடாதா,
அடி பெண்ணே?
என்று எட்டிப்பிடித்து
சிரிக்கிறான் அவன்.
அவளும் பயமின்றித்தான்
அவனைத் திருமணம் செய்துகொண்டாள்
எனினும்
இன்று
காதலனாலும் கணவனாலும் ஒரு சேர
ஏமாற்றப்பட்டு விட்டவளே அவள்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து நீங்கி
நடக்கத் தொடங்கிவிட்டாள் அந்தப் பெண்.
அந்த அகாலவேளையில்
தன்னந் தனியாய்
அவள் நடந்து கொண்டிருந்தாள்;
நம்பிக்கைகள் கைவிடப்பட்டதனால்
முழுவிழிப்பொன்றுதான் பாதை எனக்
கண்டுகொண்டவளாய்
அவள் நடந்துகொண்டிருந்தாள்.