மந்திரவாதி
ஒருவர் பாக்கியில்லாமல்
ஊரிலுள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
அத்தனை பேரும்
அடித்துப் புரண்டுகொண்டு வந்து நின்றார்கள்.
அந்த மந்திரவாதியைக் காண.
அவர் தொட்டுக் கொடுத்தது எல்லாமே
சில வினாடிகளில் பொன்னாக மாறின.
ஒருபாடு மக்கள் விதவிதமான பொருட்களை எல்லாம்
கொண்டுவந்து கொண்டுவந்து பரிசோதித்து விட்டனர்
ஆனால் அப் பொன்மையானது
சில நாழிகை நேரம்தான் என்று
முன்னமேயே சொல்லிவிட்டிருந்தார் அந்த மந்திரவாதி.
அரசன்முதல் நாட்டின்
முக்கிய பிரதானிகள் வரை
அனைவரும் ஒரு சபையாய்க் கூடி
அவரை எதிர்கொண்டனர்.
இந்த வித்தையால் நமக்கு என்ன லாபம்?
ஆசைகளாலும் மோசடிகளாலும்
மக்களிடையே நல்லெண்ணமும் அமைதியும் அழிந்து
வெறுப்பும் துயருமல்லவா பரவிவிடும்?
அய்யன்மீர்!
நான் சொல்வதைச்
சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்
நீங்கள் அனைவருமே
ஜடப் பொருள்களைத்தான்
கொண்டுவந்து கொண்டுவந்து நீட்டினீர்கள்
அவை பொன்னாகின.
இப்போது ஒரு வேண்டுகோள்.
உங்கள் காராக்கிருகச் சிறையிலிருந்து
மிகக் கொடிய கைதி ஒருவனைத் தேர்ந்து
என்னிடம் கொண்டுவாருங்கள்
அன்பனே என்று நான் அவனை
ஆரத் தழுவித் தீண்டிய பின்
அவனைத் துணிந்து விடுதலை செய்துவிட்டு
அவனைக் கவனித்து வாருங்கள்
அப்போது இந்த வித்தையின்
அருமையை உணர்வீர்கள்.
நல்லது. நீர் சொல்வது நன்கு புரிகிறது.
ஆனால் அவனும் சில நாழிகைகளில்
பழைய நிலைக்குத்தானே வந்து விடுவான்?
ஆம், அய்யா. அப்போது
அவனை மீண்டும் ஒருமுறை
கட்டித் தழுவ வேண்டும்
...
ஆம், அய்யா,
மீண்டும் மீண்டும் மீண்டும்.