குறைப் பிறவியினரும் கோயில்களும்
குறைப் பிறவியும் குறைப் பிறவியும்
கூடிப் பிறந்தது
குறைவிலாததோர் மாணிக்கமாய்
உதித்த்தெப்படி?
தாயிடமிருந்து அம் மாமணிச் செல்வத்தைத்
திருடிக்கொண்டு சென்று
அதை ஒரு குறைப் பிறவியாகவே
சிதைத்துக்கொண்டு வந்து நிற்பது யார்?
ஏன்?
அதிர்ந்து நிற்கவைத்துவிடும்
மானுடத் துயர் அறியாத நிலையில்
சுகம் தேடிச் சுகம் தேடிச்
சதா அலையும் காமுகர்களாகிவிடுவது தவிர
வேறு வழியில்லையா? சுகம் நிலைக்க
இயற்கை மீதும் எளியவர் மீதும்
குதிரையேறிக் கொடிகட்டிப் பறக்கும்
ஈனப் பிறவிகளாவது தவிர
வேறு வழியில்லையா?
தீயினிற் புழுவாய் வதங்கும்
இக் குறைப் பிறவிகளிடமும் தோன்றும்
இயற்கையுந்தல்கள்,
வாழ்வினிமைகள் காணுங்கால்
இளக்காரமின்றிக்
கசியும் மனமெங்கே?
பரிவும் ஞானமும் கொண்ட பாவனையில்
சில்லறைகளை எறிந்துகொண்டு
பரிதாபமாய் வீற்றிருக்கும்
இக் கோயில்களைக் கட்டியதும்
காப்பாற்றிக் கொண்டேயிருப்பதும்
எத்தகைய குறைப் பிறவியினர் கை?
துயரழிக்கும்
மானுடப் பொறுப்பு தீண்டா நிலையில்
இக் கோயில்கள் கொண்டாட்டங்கள் திருவிழாக்கள்
மாளாச் சடங்குகள் கலைகள் மற்றும்
இலக்கியங்கள் அனைத்துமே
ஈனச் சுகம் தரும்
போகப் பொழுதுபோக்குகளன்றி வேறென்ன?
இக் குறைப் பிறவியினர்
கூட்டம் கூட்டமாய் வந்திங்கே
குழுமி நிற்பதன் பொருள்தான் என்ன?