செல்வந்தக் குணசீலன்
தன்துயரின் முதல் சொற்றொடரைத்தான்
அவன் உரைத்திருப்பான்
அதைத் தொடரவிடாமல்
அவர் அவனுக்கு உதவுகிறார்.
எத்துணை தெளிவு! எத்துணை விரைவு!
அவரது பாதுகாப்புப் படையில் ஒருவனாகி
அவரது வாயில் காப்போன்களில் ஒருவராய்
அமர்ந்துள்ளோர்தாம் எத்தனை பேர்!
மனிதனின் தகுதியையும் இயலாமையையும்
தனது பேரறிவால் தீர்மானித்தபடி
படியளக்கும் எத்தனை பெரியவர் அவர்!
எத்தனை குடும்பங்களைக் காக்கும்
பெருங் காமமும் பெருங் கருவியும்
அவர் பெற்றுள்ளார்!
இன்னும் இன்னும் என
அவர் துடித்துக் கொண்டிருக்கிறார்!
அவரது தேவை எல்லாம்
நீ அளக்கப் போகும்
உன்துயர்க் கதை அல்ல;
உனது வறுமையும் உழைப்பும்
உனது பொண்டாட்டி பிள்ளைகளின்
இளமையும் நோய்மையும் இன்னபிற
செல்வங்களும்தான்.
நகர வீதியின் மாசுக் கேடும்
அமைதியின்மையால் உயரும் வெப்பமும்
கருப்புக் கண்ணாடி இயற்றப்பட்ட
தனது குளிர் சாதனக் காரின்
உள் நுழையாது என அவர் நம்புகிறார்.
தங்கள் சோற்றிலும் நல்வாழ்விலும்
மண்ணள்ளிப் போட்ட விதியை நோக்கி
நீதிக்காய் வயிறெரிந்து அழும்
அபயக் குரல்களும் கதறல்களும்
தன் செவியை உறைக்காதபடியும்
நெரிக்கப்பட்டபடியும்
பிறர் பார்வையிலிருந்தும்
அவர் தம்மை மறைத்துக்கொள்ள விரும்புகிறார்.