தர்ப்பூசணிக்காரன்
பெருங் கருணை ஒன்றின் கைப்பாவையோ
தூதுவனோ, தேவனோ?
எப்போதும் பூஜ்யத்திலிருக்கும் தராசு முள்ளுடனும்
கனியின் குருதிச் செம்மை நோக்கியே பாயக் கூடிய
குறுவாளுடனும், தாகமில்லாதவர்களே மிகுந்து மிகுந்து
காணாமற் போனால்- பூச்சாண்டி காட்டும்
தயார்ச் சக்கரங்களுடன் கூடிய தள்ளுவண்டியுடனும்
நடைபாதையில் அவன் நின்று கொண்டிருக்கிறான்,
கொளுத்தும் கோடையிலே தண்ணீர்க்
கனி குலுங்கும் குளிர் தருவாய்!
காதற் பெருந்தகையோ, காமனோ
பேதை என் நெஞ்சிற் பித்தேற்றும் கோலமோ,
காதலையும் காமத்தையும் அறிந்து
உலகைப் புரந்தருளும் பேரறிவோ
தாக உதடுகளிற்
கரைந்தே விடுபவனோ, மாயனோ?